பக்கம் எண் :

உரையாசிரியர்கள்490

மொழியிலேயே செய்தார். தமது ஸ்ரீ பாஷ்யத்தில் ஓர் இடத்தில் கூட
ஆழ்வார்களின் பாடல்களைக் குறிப்பிடவே இல்லை. வட மொழியில்
பேருரை பல கண்டு பாஷ்யகாரர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இவர்,
திருவாய் மொழிக்கு விளக்கவுரை எழுதாமை தமிழரின் தவக்குறைவே
யாகும்.*

விழுதுகள்

    வைணவ உலகில், ஆலமரம் போல் ஓங்கி வளர்ந்து, பல நூறு
கிளைகளுடன் பொலிந்த இராமானுசருக்கு, விழுதுகள் போல் சீடர் பலர்
தோன்றினர். பல்வேறு நாட்டினரும், சாதியினரும் சீடர்கள் ஆயினர். மகளிர்
பலர், அடியவர் ஆயினர். ஆளவந்தாரின் மைந்தர்களும், அவருடைய
சீடர்களின் மைந்தர்களும் இவரை நாடி வந்து மாணவர் ஆயினர்.
அரிசனங்களைத் ‘திருகுலத்தார்’ என்று பெயரிட்டுச் சீடராக்கிக் கொண்டார்.

     இவ்வாறு 74 பேர் குறிப்பிடத் தக்க சீடர்கள் ஆயினர். இவர்களுக்குச்
சிம்மாசனாதிபதிகள் என்ற பெயர் ஏற்பட்டது. இவர்களில் கூரத் தாழ்வான்,
அமுதனார், வடுக நம்பி, பிள்ளான், பராசுர பட்டர் ஆகியோர் சிறப்பு
வாய்ந்தவர்கள்.

கூரத்தாழ்வான்

    இவர் இராமானுசருக்குச் செய்த உதவிகள் மிகப் பலவாகும். இவர்
கல்வியிற் சிறந்த பெரியவர். வடமொழியும் தென் மொழியும் கற்றுத்
துறை போகிய வித்தகர், இவரை அமுதனார், ‘மொழியைக் கடக்கும் பெரும்
புகழான்’ என்றும்: ‘வஞ்சக் குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்து
ஆழ்வான்’ என்றும் போற்றியுள்ளார்.

அமுதனார்

     அமுதனார், இராமானுசரைப் போற்றிப் பாடல்கள் இயற்றி இராமானுச
நூற்றந்தாதி என்று பெயரிட்டு, தம் பக்தியை வெளிப்படுத்தினார். இந்தநூல்,
திவ்வியப் பிரபந்தங்களுக்கு இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

     அமுதனார், தம் பெயருக்கு ஏற்ப அமுதப் பாடல்களை இயற்றியுள்ளார்.
இராமானுசரை,

    அறஞ் செப்பும் அண்ணல்              (47)

    உண்மை நல்ஞானம் உரைத்த இராமானுசன்          (73)

    நல்லார் பரவும் இராமானுசன்                (80)

    தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன்                   (82)


 * மு. அருணாசலம் ; தமிழ் இலக்கிய வரலாறு - 12 நூற் II; பக். 741, 742.