கற்றார் பரவும் இராமானுசன் (86) பொற் கற்பகம் எம் இராமானுசன் (99) என்று போற்றுகின்றார். இராமானுசர், இராமாயணத்தில் ஈடுபாடு மிகுந்தவர் என்பதை, படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசன் (37) என்று வியந்து கொண்டாடுகின்றார். எழுதாத உரைகள் இராமானுசர் காலம்வரை, திவ்வியப் பிரபந்தத்திற்கு வாய் மொழியாகவே - பரம்பரை பரம்பரையாக உரைகள் வழங்கி வந்தன. இராமாநுசருக்குப் பின்னரே வைணவ உரைகள், வியாக்கியானங்கள் என்ற பெயரால் எழுதப்பட்டன. இராமானுசருக்குச் சீடர் பலர் தோன்றினர். கூரத்தாழ்வான் இராமானுசரின் நெருங்கிய மாணவர் ஆனார். பிரபந்தத்திற்கு விரிவுரை கூறும் ஆற்றலும், வைணவ சமயக் கருத்துகளை விளக்கும் திறனும் பெற்றார். அவர் காஞ்சிபுரத்திற்கு அருகே கூரம் என்னும் இடத்தில் பிறந்தார். அவருடைய மைந்தன் பராசுர பட்டரும் தம் தந்தையைப் போலவே சிறப்புற்று விளங்கினார். இவர்களில் ஒருவரும் பிரபந்தத்திற்கு எழுத்து வடிவில் உரை எழுதிவைக்கவில்லை. ஆனால், வாய்மொழியாக இவர்கள் கூறிவந்த உரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இராமானுசரின் முன்னோராகிய ஆளவந்தார் பிரபந்தத்திற்கு உரைத்த பல நுட்பங்களை. ஈட்டின் உரையாசிரியர் ஆங்காங்கே குறிப்பிடுகின்றார். ஏனைய உரையாசிரியர்களும் கூரத்தாழ்வான் இவ்வாறு கூறினார், பராசுர பட்டர்களும் கூரத்தாழ்வான் இவ்வாறு கூறினார், பராசுர பட்டர் இவ்வாறு விளக்கினார் என்று தம் உரைகளில் குறிப்பிடுகின்றனர். எடுத்துக் காட்டிற்கு ஒன்று தருவோம்; ‘உறுமோ பாவியேனுக்கு’ என்ற பாடலில் வரும் ‘சிறுமா மனிசராய்’ என்ற தொடர், முரணாய் இருக்கிறதே என்று கூரத்தாழ்வானை, அவர் மகன் பட்டர் கேட்டார் என்றும், ‘மேனி சிறுத்து ஞானம் விரிந்து இருக்கலாம் அன்றோ?’ என்று விடை பகர்ந்தார் ஆழ்வான் என்றும் உரை கூறுகின்றது. எழுத்து வடிவம் பெறாமலே நெடுங்காலம் வியாக்கியானங்கள் வழங்கி வந்தன என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன. வாயால் விளக்கம் கூறிய பெரியோர்களின் உரையை எல்லாம் கேட்டு எழுதிப் போற்றிய பிற்காலப் பெரியோர்கள், வாய்மொழியாக உரைகூறி வந்தவர்களைப் பெரிதும் போற்றி |