மதித்தினர். பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் திருவரங்கத்து அந்தாதியில் (3) குருபரம்பரையைக் குறிப்பிடும்போது, சீதரன் பூமகள் சேனையர் கோன்தென் குருகைப்பிரான் நாத முனிஉய்யக் கொண்டார் இராமர்நல் ஆளவந்தார் ஏதமில் வண்மைப் பராங்குச தாசர் எதித்தலைவர் பாதம் அடைந்துய்ந்த ஆழ்வான்எம் பார்பட்டர் மற்றுஎமக்கே என்று போற்றுகின்றார். நாதமுனிகள் தேக்கிவைத்த ஆழ்வார்களின் பாடல்களாகிய பக்தி வெள்ளம், உரையாசிரியர்களின் விளக்கம் என்னும் பலவேறு வாய்க்கால்களில் பெருகி, கரை புரண்டு ஓடி வைணவப் பயிரை வளர்த்து வருகின்றது. பெயர் பெற்ற சிறப்பு திருமால் அன்பர்களுக்கு வழுங்குகின்ற பெயர்கள் நம் கருத்தைக் கவர்கின்றன. நம்மை எல்லாம் ஆள்பவர்கள் என்ற கருத்தில் ஆள்வான் (ஆழ்வான்) ஆண்டான் ஆண்டாள் போன்ற பெயர்கள் வழங்குகின்றன. ஆசான் (ஆச்சான்) நம்பி பட்டர் சீயர் பெருமான் (பெருமாள்) அரயர் பிள்ளான் தாசர் போன்ற பெயர்கள் அவர்களுக்கு உண்டு. இப் பெயர்களுக்கு முன்னால் ‘நம்’ சேர்ந்து வருவது வழக்கம். இதனை உபதேச ரத்தினமாலை, நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர்தம் ஏற்றத்தால் என்று குறிப்பிடுகின்றது. இராமானுசர் காட்டிய வழி இராமானுசர், திருவரங்கத்திலே வீற்றிருந்து சமயத்தொண்டு புரிந்து வந்த போது, சீடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, திருக்குருகைப் பிரான் பிள்ளையை, “திருவாய் மொழிக்கு விளக்கவுரை எழுத வேண்டுமென்று, நீர் இராமானுசரை வேண்டிக் கொள்ளவேண்டும். அவர்கள் காலத்திலேயே அவர்கள் திருவுள்ளப்படியே - அவர்கள் வாக்கலேயே வியாக்கியானம் பெற வேண்டும்!” என்று கூறினர். அதற்குப் பிள்ளான் உடன்பட்டார். இராமானுசர், பெருங்கூட்டமாக இருந்த அடியவர்களின் நடுவே வீற்றிருந்தபோது, பிள்ளான் சென்று அவரது திருவடிகளில் வீ்ழ்ந்து வணங்கி, “தேவரீர், திருவாய் மொழிக்கு வியாக்கியானம் செய்தருள வேண்டும்!” என்று வேண்டினார். |