தம் மாணவர் வேண்டுகோளுக்கு இணங்காத இராமானுசர், தாம் விளக்கம் எழுதுவது தகாது என்று பின்வரும் காரணங்களைக் கூறி மறுத்துவிட்டார். 1. ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு விளக்கம் எழுதி விட்டால் மந்த மதிகட்கு, ‘இதற்கு இத்துணையே பொருள்’ என்று தோன்றிவிடும். 2. ஆழ்வார் பாடல்களில் கருத்து, எழுத்தில் அடங்கி விடும் தன்மையுடையது அன்று. அவரவர்களின் அறிவு நுட்பத்திற்கும் பக்தி மேம்பாட்டிற்கும் உலக அனுபவத்திற்கும் ஏற்றவாறு விரிவடையும் இயல்புடையது. 3. தாம் உரைசெய்துவிட்டால், ஆழ்வார்பாடல்களுக்கு இதுவே கருத்து என்று வரம்பு கட்டியதுபோல் ஆகிவிடும். ஏனெனில் ஆசிரியர் மீது கொண்டுள்ள அளவற்ற பக்தியினால் அவரது மாணவர்கள் அதற்கு மேல் சிந்திக்க - விளக்கம் கூற முற்படார். யாரேனும் பிற்காலத்தில் சிறந்த விளக்கம் கூறினாலும் அதனை ஏற்காது புறக்கணிப்பர்.* இத்தகைய காரணங்களைக் கூறி இராமானுசர் தாம் விளக்கம் எழுத மறுத்துவிட்டார். ஆனால், அதே நேரத்தில் தமக்கு அந்த வேண்டுகோள் விடுத்த மாணவரையே - பிள்ளானையே உரை செய்யுமாறு மணித்தார். பிறர் உரை எழுதுவதை வரவேற்றார்; ஊக்குவித்தார். இராமானுசர் காட்டிய வழி, காலப் போக்கில் பெருவழியாயிற்று. பிள்ளான் திருவாய்மொழிக்கு 6000 படி இயற்றினார். அதனை விரிவாக்கி நஞ்சீயர் 9000 படி இயற்றினார். பெரியவாச்சான் பிள்ளையால் அது 24000 படி ஆயிற்று. வடக்குத் திருவீதிப்பிள்ளை அதனை 36000 படியாக்கினார். இவ்வாறு ஐந்து உரைகள் ஒன்றன் பின் ஒன்றாய் - ஒன்றிற்கு ஒன்று விளக்கமாய்த் தோன்றின. இவற்றிக்குப்பின், மணவாளசீயர் 12000 படி செய்து, சுருங்கச் சொல்லி விளக்கினார். திருவாய் மொழிக்கு, காலந்தோறும் விளக்கவுரை எழுதி வந்த ஆசாரியார்களைக் கீழ்வரும் வெண்பா போற்றியுரைக்கின்றது. பிள்ளான்நஞ் சீயர் பெரியவாச் சான்பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப் - பிள்ளை மணவாள யோகிதிரு வாய்மொழியைக் காத்த குணவாளர் என்றுநெஞ்சே கூறு -மணவாளமாமுனி * பார்க்க பிற்சேர்க்கை - 5 |