இந்தப் பாடல் பிள்ளான் நஞ்சீயர் முதலியோரைத் ‘திருவாய் மொழியைக் காத்த குணவாளர்’ என்று போற்றுகின்றது. இது குறிப்பிடும் சான்றோர்களையும் அவர்கள் இயற்றியுள்ள உரை விளக்கங்களையும் காண்போம்; 1. பிள்ளான் - திருக்குருகைப் பிரான் பிள்ளை: 6000 படி இயற்றியவர். 2. நஞ்சீயர் - நம்பிள்ளை கூறிய விளக்கத்தை எழுதிப் போற்றியவர். அந்த விளக்கம் 9000 படி. 3. பெரியவாச்சான் பிள்ளை - வியாக்கியான சக்கர வர்த்தி; 24000 படி இயற்றிவர். 4. வடக்குத் திருவீதிப் பிள்ளை - 36000 படி இயற்றியவர். 5. மணவாள யோகி - 1200 படி இயற்றியவர். மேலே உள்ள பாடல் 9000 படியைத் தோற்றுவித்த நம் பிள்ளையைக் குறிப்பிடவில்லை. ஏனெனில், நம்பிள்ளை எழுதிய விளக்கம் அவர் ஆசிரியர் நஞ்சீயர் பெயரால் வழங்கி வருகின்றது. அந்த உரை நம்பிள்ளை பெயராலேயே வழங்குதல் வேண்டும். ஆனால் வழி வழியாக வந்த மரபை யொட்டி நஞ்சீயர் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் - அந்தோ, திருவாய் மொழிப்பொருளை, தேர்ந்துரைக்க வல்ல குருஆர்,இக் காலம்? நெஞ்சே கூறு. -மணவாளமாமுனி திருவாய்மொழி, உரைக்களஞ்சியம் உடைய பெருநூலாய்த் திகழ்கின்றது. இத்தகைய சிறப்பு, வேறு எந்தச் சமய நூலுக்கும் ஏற்படவில்லை. திருவாய் மொழியை - நம்மாழ்வாரை வைணவச் சான்றோர்கள் எவ்வாறு போற்றியுள்ளனர் என்பது இவ்வுரைகளால் விளங்கும். வைணவ உரையாசிரியர்கள், தாம் செய்த விளக்கவுரையை வியாக்கியானம் என்று குறிப்பிட்டனர். உரைகளில் உள்ள எழுத்துக்களைக் கணக்கிட்டு, எண்களால் அவற்றிற்குப் பெயரிட்டனர். படி என்ற சொல்லை ஓர் அளவையாகப் பயன்படுத்தினர். படி என்பது எழுத்துக்களை எண்ணிக் கூறுகின்ற ஓர் அளவு. மெய் எழுத்துக்கள் நீங்கலாக மற்ற எழுத்துகள் (உயிரும் உயிர் மெய்யும்) 32 கொண்டது ஒருபடி. படியைக் கிரந்தம் என்றும் கூறுவர். “ஒரு கிரந்தமாவது ஒற்று ஒழிந்து, உயிரும் உயிர்மெய்யும் |