பக்கம் எண் :

உரையாசிரியர்கள்500

ரஸ்யதையாலே, ‘ஈக்கள் வண்டொடு மொய்ப்பது’ என்று ஆற்று வரவுகளிலே
சொல்லுவாரகளாய்த்துத் தமிழர்”.

     இங்கே, ‘ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து’ (பால-ஆற்று-10)
என்ற கம்பர் பாடலின் அடியை மேற்கோள் காட்டியுள்ளார்.

     யுத்த காண்டத்தில்-வருணணை வழி வேண்டு படலத்தில் (5),
‘தருணமங்கையை’ என்று தொடங்கும் பாடலில் வருகின்ற

      கருணை யங்கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி

என்ற அடியையும்’ பெரியவாச்சான் பிள்ளை எடுத்தாண்டுள்ளார்.

     “கடல், தன்னைப் பொர அளவுடைத்தாக நினைத்திருக்குமாயிற்று;
அதுக்காக ஒரு கடல் ஒரு கடலோடே ஸ்பர்தித்து (மாறுபட்டு)க்
கிடந்தாற்போலே இருக்கை; கருணையங் கடல் கருங்கடல் நோக்கிக்
கிடந்தது’ என்னும்படியிறே” (திருவாய்மொழி, 6-9-3).

தமிழ்நடை

    பெரியவாச்சான் பிள்ளை, பகவானையும் பிரபஞ்சத்தையும்
ஆன்மாவையும் இவர்களுக்குள்ள தொடர்பையும் பற்றிப் பேசும்போது,
பெரிதும் வடசொற்றொடர்களைக் கொண்டு எழுதுகின்றார். ஆனால், இயற்கை
வருணனை போன்றவை கூறும் இடங்களில் தம்மை மறந்து இனிதாகத் தமிழ்ச்
சொற்களாலேயே விளக்கமும் கதைகளும் சொல்லிக் கொண்டு போகிறார்.*

36000 படி

    நம்பிள்ளையின் மற்றொரு மாணவராகிய வடக்குத் திருவீதிப்பிள்ளை
முப்பத்தாறாயிரப் படியை வழங்கினார். இதுவே ஈடு என்று
வழங்கப்படுகின்றது. ஈட்டின் ஆசிரியர், திருவரங்கத்தில் வடக்கு வீதியில்
வாழ்ந்து வந்ததால் வடக்குத் திருவீதிப்பிள்ளை என்னும் பெயர்பெற்றார்.
நம்பிள்ளை நாள்தோறும் செய்துவந்த காலட்சேபத்தில் அருளிச்செய்த
விரிவுரை, வடக்குத் திருவீதிப் பிள்ளையால் எழுதிவைக்கப்பட்டு ஈடு
என்னும் பெயர் பெற்றது. இச் செய்தியை மணவாள மாமுனிகள்,

    தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை
    வள்ளல் வடக்குத் திருவீதிப் - பிள்ளைஇந்த
    நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்து
    ஈடுமுப்பத் தாறா யிரம்

என்று கூறுகின்றார்.


 * மு. அருணாசலம், இலக்கிய வரலாறு, 13-நூற். பக். 342.