ஈடு ஈடு என்று இவ்வுரை வழங்குவதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். 1. ஈடு என்ற சொல்லுக்குக் கவசம் என்பது பொருள் (சிந்தாமணி 537 உரை). கவசம் உடலைக் காப்பது போல முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானம் திருவாய்மொழியைக் காத்து நிற்கின்றது. கற்போராலும் எழுதுவோராலும் வேற்றுமக்களாலும் தன்நிலை திரிந்து மாறுபடாத வண்ணம் இவ்வுரை திருவாய் மொழியைக் காக்கின்றது என்பது கருத்து. 2. இடுதல் என்ற சொல்லுக்கு எழுதுதல் என்ற பொருள் உண்டு. இடு முதல் நீண்டு ஈடு என வழங்கும். நம்பிள்ளை நாள்தோறும் காலட்சேபத்தில் அருளிச் செய்தவற்றை வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிவைத்ததால் ஈடு என்று வழங்கப்பட்டது. 3. சுருதப் பிரகாசிகையினை அளவால் ஒத்து இருத்தலின் இதனை ஈடு என்றனர். ஈடு என்ற சொல்லுக்கு ஒப்பு என்பது ஒரு பொருள். 4. தன்னைக் கற்பவர் எல்லாரையும் இறைவனிடம் ஈடுபடச் செய்வத ஆதலின் இது ஈடு எனப்பட்டது. ஈட்டின் பெருமையை வைணவப் பெரியோர் பலவாறு எடுத்துக் கூறுகின்றனர். பின்வரும் பகுதி ஈட்டின் புகழை உணர்த்தும்: “ஈட்டின் நடையழகு தனிச் சிறப்பு வாய்ந்தது; பொருள் உணர்வோடு பயிலப்பயிலப் பேரின்பம் பயப்பது: சொல்லாற்றல்கள் பொருளாற்றல்கள் அமைந்தது; சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் என்னும் வனப்பு வாய்ந்தது; கூறப்புகும் பொருளை விளக்குவதற்குச் காட்டப்படும் மேற்கோள்கட்குப் பொருள் கூறும்முறை எத்தகையோரும் வியக்கத்தக்கது; பதசாரம் கூறுவதில் இவ் ஈட்டின் ஆசிரியருக்கு ஒத்தாரும் மிக்காரும் இத் தமிழ் நாட்டில் இலர்; பிற நாட்டிலும் இலர் என்று கூறலாம்; ஒரு பதிகத்தோடு மற்றொரு பதிகத்திற்கும் உள்ள பொருள் தொடர்பைக் கூறிச்செல்லும் மாண்பு வேறு எவ்வுரையிலும் காண்டல் அரிது”.* ஒரு பகுதி திருவாய்மொழி ஈட்டிலிருந்து ஒரு பகுதியை இங்கே காண்போம்; * திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம் பகுதி I (1957) பக்கம் 46. |