அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே என்பது திருவாய்மொழி. இவ்விரு அடிகளுக்கும் ஈட்டு உரையின் பொழிப்புரை பின்வருமாறு: “அழகியதான செல்வம்; முழுவதையும் பார்த்து அஃது இறைவனுக்குள் அடங்கிய செல்வம் என்று நினைந்து, அச் செல்வத்திற்குள் நீயும் அடங்கு.” விளக்கம் “கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவின்றியே இருக்கவும், திரைமேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறதில்லையோ? அப்படியே அவனுடைய ஐசுவரிய அலையானது அவனைத் தள்ளாதோ என்னில், இந்த ஐசுவரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐசுவரியமென்று நினைத்தால் தானும் அதுவாகச் சேரலாமே. ஆனபின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார். மேற்கோள் கதை எங்ஙனம் எனின், ஒருவணிகன் தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் பொருள்தேடும் விருப்பினால் வெளிநாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; மகனும் தக்க வயதடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாகப் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டியச் சரக்குப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள். அஃது இருவர்க்கும் போதாமையால் அம்பறுத்து எய்யவேண்டும்படி விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும் அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தகப்பன்; நீ இவன் மகன்!’ என்று அறிவித்தால் கீழ் இருந்த நாட்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய் அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப் படும் பொருளாய்க் கலந்துவிடுவார்களன்றோ! கருத்துரை அதுபோன்று, சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிய ஒரு மரத்தினைப்பற்றி இருந்தால், ஒருவன் இருவினைப் பயன்களை நுகரா நிற்பான்; ஒருவன் நுகர்வித்து விளங்கா நிற்பன்; அவன் ஏவுகின்றவன்; நாம் ஏவப்படும் பொருள் என்னும் முறையறிவே பொருந்தலாம் அன்றோ? எடுத்துக்காட்டு ஓர் அரச குமாரன் பூங்கா ஒன்றினைக்கண்டு புகஅஞ்சினால், ‘இது உன் தகப்பனதுகாண்’ என்னவே, நினைத்தபடி நடந்து |