இவர் கல்வியறிவு இல்லாதவராய் இருந்தார். ஒரு நாள் கூட்டமாய்ச் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவர் சிலரைக் கண்டு, “நீங்கள் என்ன படிக்கிறீர்?” என்று கேட்டார். அந்த மாணவர்கள் இவர் எழுத்தறிவில்லாதவர் என்று அறிந்து சிரித்துக் கொண்டே, “முசலகிசலயம் படிக்கிறோம்!” என்றனர். அதன் பொருளை அறியாத இவர், தம்மை மாணவர்கள் எள்ளி நகைக்கின்றனர் என்று மட்டும் அறிந்து கொண்டார். பின்னர்ப் பெரியவச்சான் பிள்ளையிடம் சென்று வணங்கி நடந்ததைக் கூறினார்; முசல கிசலயம் என்பதற்கு விளக்கம் கூறுமாறு வேண்டினார். பெரியவச்சான் பிள்ளையும் நகைத்துக் கொண்டே, “நீர் படிப்பு வாசனை இல்லாதவர்! ‘நாங்கள் படிப்பதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்?’ என்று உம்மை எள்ளி நகைக்கின்றனர். முசலகிசலயம் என்பதற்கு, உலக்கைக் கொழுந்து என்பது பொருள். அப்படி ஒரு நூல் இல்லை!” என்றார். இவ்வாறு பிள்ளை கூறியவுடன், மணவாளர் பெரிதும் நாணமடைந்தார். அவரது திருவடிகளின் விழுந்து வணங்கினார்; “அடியேனை மாணவனாய் ஏற்றுக் கொண்டு, கல்வி கற்பித்துப் புலவனாய் ஆக்குதல் வேண்டும்!” என்று வேண்டினார். பிள்ளை மனம் உருகி இவருக்குக் கல்வி மீது ஏற்பட்ட ஆர்வத்தை அறிந்து போற்றி, அன்றுமுதல் கல்வி கற்பித்து இவரைப் பெரும் புலவராய் ஆக்கினார். புலமை பெற்றபின், ‘முசலகிசலயம்’ என்னும் பெயரில் காவியம் ஒன்றை இயற்றினார். அதனை, முன்பு தம்மை இகழ்ந்த மாணவர்களிடம் காட்டி அவர்களைத் தலைகுனியுமாறு செய்தார். பின்னர், திருவாய்மொழிக்குத் தோன்றிய மிகவிரிவான வியாக்கியானங்களை எல்லாம் கற்றறிந்தார். அவற்றைச் சுருக்கி, சாரமாய் - எளிதாய்-எல்லோர்க்கும் விளங்கும் வகையில் 12000 படி இயற்றினார். பராசரபட்டர் (1192-1220) கூரத்தாழ்வாரின் மைந்தர். கி.பி. 1123-இல் பிறந்தவர். இராமானுசரின் சீடர் ஆன பின், இவருடைய கீர்த்தி விளங்கி வரும் காலத்தில் வடநாட்டிலிருந்து மாதவசூரி என்றும் வேதாந்தி, அனைவரையும் தர்க்கத்தில் வென்று மிக்க சிறப்போடு திருவரங்கம் வந்தார். அவரைப் பட்டர் சென்று பார்த்து வெற்றி கொண்ட செய்தியை நஞ்சீயர் வரலாற்றால் அறியலாம். தோற்ற அந்த வேதாந்தியே இவருடைய மாணாக்கராகி, நஞ்சீயர் என்று பெயர் பெற்றார். |