பக்கம் எண் :

உரையாசிரியர்கள்506

     பட்டர் திருநெடுந்தாண்டக வியாக்கியானத்தில் மிகவும் வல்லவர்.
அதிலும் சிறப்பாக 21 ஆவது பாடலாகிய,

    மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின்தாழ

என்ற பாடலுக்கு மிகவும் விரிவாகப் பிரசங்கம் செய்வாராம். இதைச்
சொல்லியே இவர் வேதாந்தி (மாதவசூரி)யை வென்றார். இந்தப் பகுதி
மட்டும் இன்று கிடைக்கிறது. ஏனைய பகுதிகள் கிடைக்கவில்லை.*

திருக்கோனேரிதாஸ்யை (1217-1312)

    இவர், புலமைமிக்க வைணவப் பெண்மணி. திருவாய்மொழி வாசகமாலை
என்னும் விவரண சதகம் எழுதினார்.

     இந்த நூல், திருவாய்மொழியிலிருந்து தேர்ந்தெடுத்த 164 பாடல்களுக்கு
விளக்கம் கூறுகிறது. திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்திலும் உள்ள
முதல் பாட்டையோ அடுத்த பாட்டையோ எடுத்து விளக்குகின்றது.
பதிகத்திலுள்ள பத்துப் பாடல்களிள் கருத்தும் ஒன்றிலேயே அடங்குமாறு
விளக்குகின்றார். நூறுபகுதியாக விவரிப்பதால் இது விவரண சதகம்
எனப்பட்டது.

     இதனை 1952-இல், தஞ்சை சரசுவதி மகால் வெளியிட்டுள்ளது.

மணவாள மாமுனி

    இராமானுசருக்குப்பின், ஆசாரியார் பரம்பரையில் சிறப்புடன்
விளங்கியவர் மணிவாள மாமுனிகள். இவர் ஆழ்வார் திருநகரியில் 1370 இல்
(சாதாரண ஆண்டு, ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில்) தோன்றினார்.

     பெரியாழ்வார் திருமொழிக்கும், இராமானுச நூற்றந்தாதிக்கும் விளக்கம்
எழுதிப் புகழ் பெற்றவர் இவர். வைணவ உலகம்,

    அடியார்கள் வாழ, அரங்க நகர்வாழ,
    சடகோபன் தண்டமிழ்நூல் வாழ,-கடல்சூழ்ந்த
    மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே!
    இன்னும்ஒரு நூற்றாண்டு இரும்

என்று போற்றுகிறது.


 

 * மு. அருணாசலம், 12 நூற், II இலக்கிய வரலாறு பக். 764