பக்கம் எண் :

509ஆய்வு

     திருவிருத்தம் பெரியவாச்சான் பிள்ளை விளக்கத்திற்கு அப்பு
அரும்பதமும், பெயர் தெரியாத இருவர் எழுதிய அரும்பத உரைகள்
இரண்டும் உள்ளன.

செய்யுள் வடிவ உரை

    நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பொருளைச் சுருக்கமாய்
மதுரகவியாழ்வார் “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற பகுதியில்
பாடித்தந்துள்ளார்.

     கம்பர் இயற்றிய ‘சடகோபர் அந்தாதி’ நம்மாழ்வாரைப் போற்றிப்
பாடுகின்றது.

     திருவாய்மொழிப் பதிகம் ஒவ்வொன்றின் கருத்தையும் சுருக்கி வெண்பா
ஒன்றில் அமைத்துப்பாடும் நூல், திருவாய்மொழி நூற்றந்தாதி.

தனியன் உரை

    திவ்வியப் பிரபந்தத்தில், ஒவ்வொரு நூலின் முன்னும் பின்னும் சிறப்புப்
பாயிரப்பாடல் ஒன்றோ பலவோ உள்ளன. இவை நூலின் கருத்தைச்
சிறப்பிக்கின்றன; நூலியற்றிய ஆழ்வார்களைச் சிறப்பிக்கின்றன. இவற்றைத்
‘தனியன்’ என்று கூறுவது வழக்கம். நூலுள் சேராமல், தனித்து நிற்றலின்
தனியன் என்ற காரணப் பெயரால் வழங்குகின்றது. தனியன்கள்
எல்லாவற்றிற்கும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் சிறந்த உரை இயற்றியுள்ளார்.

சைவர்களின் பாராட்டு

    வைணவப் பெரியோர்கள் எழுதியுள்ள வியாக்கியானங்கள் ஏனைய
சமயத்தவராலும் பெரிதும் பாராட்டப்படுகின்றன. அவ்வுரை விளக்கங்களைச்
சைவ சமயத்தவரும் போற்றிக் கற்று மகிழ்கின்றனர். திருஞான சம்பந்தர்,
அப்பர் முதலிய அருட்கவிஞர்களின் திருமறைப் பாடல்களுக்கு வைணவ
வியாக்கியானங்களைப் போன்ற விளக்கவுரைகள் தோன்றவில்லையே என்ற
ஏக்கம் சைவப் பெரியோர்கள் நெஞ்சத்தில் தோன்றியதுண்டு.

     டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரின் நண்பரான தியாகராச செட்டியாரை,
அக் காலத்தில் உயர் பதவியிலிருந்த பட்டாபிராமபிள்ளை சைவத்
திருமுறைகளுக்கு வைணவ வியாக்கியானங்களைப்போல விளக்கவுரை
எழுதுமாறு அடிக்கடி தூண்டி வந்தார்.