பக்கம் எண் :

உரையாசிரியர்கள்510

     பண்டிதமணி கதிரேசன் செட்டியார், “இந் நூல்களை
(வியாக்கியானங்களை)ப் போல, தேவாரம் முதலிய சைவ நூல்களுக்கு
வியாக்கியானம் எழுத யாராவது முன் வருவார்களானால் அது வரவேற்கத்
தகுந்த இலக்கியப்பணியாகும்” என்று கூறியுள்ளார். (பண்டிதமணி, சோமலெ-
பக்கம்;197).

     இத்தகைய எழுச்சியின் காரணமாக இருபதாம் நூற்றாண்டில்,
திருவாசகத்திற்குப் பல உரைகள்  தோன்றின. ஏனைய திருமுறைகளுக்கும்
விளக்கங்கள் சில எழுதப்பட்டன.

     நாயன்மார்களின் வரலாற்றைத் தெள்ளுதமிழில், பக்திச் சுவை நனி
சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார் வைணவ உலகத்தில் தோன்றி
ஆழ்வார்களின் வரலாற்றை எழுதிப் பரப்பவில்லையே என்ற குறை
வைணவர்களுக்கு உண்டு.

     ஆழ்வார்களின் பாடல்களுக்கு வியாக்கியானங்கள் எழுதி
வைணவத்தைச் செழிக்கச்செய்த பெரியவச்சான் பிள்ளை, சைவ உலகில்
தோன்றித் திருமுறைகளுக்கு விளக்கங்கள் எழுதவில்லையே என்ற குறை
சைவர்களுக்கு இருந்து வருகின்றது. “வைணவத்திற்கு ஒரு சேக்கிழாரும்
சைவத்திற்கு ஒரு பெரியவாச்சான்  பிள்ளையும் இல்லை!” என்று
கூறுவதுண்டு.

திங்களில் களங்கம்

    வெண்ணிலவில் உள்ள களங்கம்போல், இவ்வுரைகளில் சில குறைகள்
இருப்பதாய்ப் பெரியோர் சிலர் கூறுகின்றனர். பண்டிதமணி, “இவ்
வியாக்கியானங்களில் எடுத்ததற்கு எல்லாம் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
முன் சொன்னதே பல இடங்களில் திருப்பிச் சொல்லப் பெற்றிருப்பதால் இந்
நூல்களில் ஒழுங்குமுறை இல்லை என்று சொல்லலாம்” என்று கூறுகின்றார்.

     பி. ஆர். மீனாட்சிசுந்தர முதலியார் தமிழ்நூல் விளக்கு (முதற்பாகம்
1939) என்னும் நூலில் “நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கும்
வேதாகமங்களுக்கும் கருத்து உடையன எனப் போதிக்கப்பட்டு வருவது
தமிழ் மக்களிடை அறியாமையை வளர்த்து வருவதே. அப் பிரபந்தங்கள்
வடமொழி வேத சம்பந்தத் தொடர்பு அன்னியில், தமிழ்நாட்டில் தமிழ்ப்
பெரியோர்களால் ஆக்கப்பட்டன என்ற உண்மை தமிழ் மக்களுக்குத் தெரிய
வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார் (பக்கம் 2,3,),

     வேறொரு குறையும் தமிழறிஞர்களின் உள்ளத்தில் எழுவதுண்டு. மிகச்
சிறப்பான கவிதைகளைத் தூயதமிழில் - செஞ்சொற்களால் இயற்றியுள்ள
வியாக்கியான ஆசிரியர்கள் சில இடங்களில் தூய தமிழிலும் உரை
இயற்றியுள்ளனர். ஆனால்,