இடையிடையே மணிப்பிரவாள நடையைக் கையாண்டு அரும்பெரும் அறிவுச் செல்வங்களாகிய வியாக்கியானங்களை இன்றுள்ளவர்க்கு விளங்காமல் செய்து விட்டனரே என்று ஏங்குபவரும் உள்ளனர். சமய நோக்குடன் பயில்வோர் ஒருபுறமிருக்க, இலக்கிய இன்பம் கருதி அவ்வுரைகளைத் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் பயில இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. “ஆழ்வார்களுடைய பாடல்களுக்குப் பிற்காலத்தில் உரை வரைந்த பேரறிஞர்கள், தம் காலத்து வைணவக் கருத்துக்களுக்கு எல்லாம் அப்பாடல்களில் இடம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தால், பல வடமொழி நூற் செய்திகளையும் ஆழ்வார் பாடல்களின் கருத்துக்களாக வலிய அமைத்து உரை செய்துள்ளனர். தமிழ்மொழி இலக்கணம் நிகண்டு இலக்கிய மரபு இவைகளைக் கொண்டே ஆழ்வார்களின் பாடல்களுக்கு விளக்கம் கூற வேண்டி இருக்க இதனைவிடுத்து, வடமொழி வான்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் கூறுவதின் காரணம் புரியவில்லை. இவற்றை, திவ்வியப்பிரபந்த உரை என்பதை விட வைணவ சம்பிரதாயத்தை விரித்துக் கூறும் நூல் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது”* குரு பரம்பரா ப்ரபாவம் மணிப்பிரவாள நடையில் வைணவச் சான்றோர்கள் ஆழ்வார்களின் பாடல்களுக்கு எழுதிய வியாக்கியானங்களோடு, ஆழ்வார்களின் வரலாற்றையும் வைணவத்தை வளர்த்த ஆசிரியர்களின் தொண்டையும் வியாக்கியானம் எழுதிய உரையாசிரியர்களின் அருட்செயல்களையும் விளக்கிக்கூறும் ‘குருபரம்பரா ப்ரபாவம்’ என்னும் உரை நடை நூல்களையும் இயற்றியுள்ளனர். குருபரம்பரையைக் கூறும் நூல்கள் வைணவச் சான்றோர்களின் வாழ்க்கையை, வரலாற்றுப் பின்னணியுடன் வாய்மொழிக் கதைகளை இணைத்துத் தெய்விக நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றன. கற்பவர் உள்ளத்தில் வைணவச் சான்றோர்களிடம் பெருமதிப்பும் பக்தியும் ஏற்படும் வகையில் அவை அமைந்துள்ளன. அந் நூல்களில் இலக்கியச் சுவையும் நயமும் உண்டு. குருபரம்பரையைக் கூறும் நூல்கள் பல உள்ளன. பின் பழகிய பெருமாள் சீயர் இயற்றிய (6000 படி) குருபரம்பரையே காலத்தால் முற்பட்டது; பலவகை நயங்களால் சிறந்து விளங்குவது. அந்நூல் வைணவச் சான்றோர்களாலும் தமிழறிஞர்களாலும் பெரிதும் போற்றப்படுகின்றது. * வரலாற்றில் பிறந்த வைணவம், பக். 304 |