பக்கம் எண் :

உரையாசிரியர்கள்512

     ஏனைய குருபரம்பரை நூல்களும், வைணவச் சான்றோர்களின்
வாழ்க்கை வரலாறுகளை-விறுவிறுப்பான கதை நிகழ்ச்சிகளைக்
கட்டுக்கோப்புடன் பல்வேறு சுவைகள் வெளிப்படும் வகையில் நல்ல
நாடகமாக அமைத்துக் காட்டுகின்றன.

     அந்நூலாசிரியர்களைக் ‘கதை சொல்லும் கலைஞர்கள்’ என்னலாம்;
அவர்கள் இயற்றியுள்ள நூல்களை உரை நடைக்காவியங்கள் என்று
போற்றலாம்.

ஆண்டாள் வைபவம்

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும், பெரியாழ்வார் பெற்ற பெண்கொடி
என்றும் வைணவப் பெருமக்களால் பெரிதும் கொண்டாடப்படும்
ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு இன்று தோன்றிய புத்தம் புதுக் கதைபோல
இனிக்கின்றது. இலக்கியவானில் மிக உயரத்தில் கற்பனைச் சிறகு விரித்து
மண்ணுலகை மறந்து, மண்ணுலக மக்களை மறந்து, கண்ணன்மீது காதல்
கொண்டு பறந்து மகிழும் கலைப்பறவையாகத் திகழும் ஆண்டாள், மக்கள்
நெஞ்சத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பாள். அவள் கண்ணனை
நினைந்து பொழிந்த காதல் கவிதைகள் எக்காலத்திலும் வாடாத கற்பக
மலர்களாகப் பொலியும்.

     ஆண்டாளின் கதையைக் குருபரம்பரை நூல் மிக அழகாக வண்ண
ஓவியங்கள் தீட்டி விளக்குகின்றது.

     “நாச்சியார் தமது திருத்தகப்பனாராகிய பெரியாழ்வார்
வடபெருங்கோயில் உடையானுக்ககாத் திருமாலை கட்டிப்போடுகிற விதத்தை
அதிக நுட்பமாகக் கவனித்துக் கற்றச் சில நாளைக்கு மேல் தாமும் அவரைத்
தொடர்ந்து திருநந்தவனத்துக்குப் போய், பூக்கொய்து புட்டிலில் சேர்த்துக்
கொண்டுவந்து, செண்டுமாலை குழல்மாலை முடிமாலை கிளிமாலை
தொங்கல்மாலை உலாமாலை வெற்றிமாலை முதலிய நானாவித மாலைகளைத்
தகப்பனார் மகிழ்வடையும்படிக் கட்டிக்கொண்டு வந்து, நாளுக்கு நாள்
பெருமாள் பக்கல் ப்ரேமை அதிகரிக்கப்பெற்று...” என்று ஆண்டாளின் கதை
சொல்லப்படுகின்றது.

     ஆண்டாளின் உள்ளத்தில் மலர்ந்த பெண்மைப் பண்புகளையும், இளம்
பெண் ஒருத்தியின் நெஞ்சத்தில் தோன்றும் மிக மெண்மையான காதல்
உணர்ச்சிகளையும் பின்வரும் பகுதி ஆற்றல் வாய்ந்த சொற்களால்
வெளிப்படுத்துகின்றது.