நம்பியாண்டார் நம்பி, திரு முறைகள் என்ற பெயருடன், நால்வர் அருட்பாடல்களையும் அவர்களுக்கு முன்னும் பின்னும் தோன்றிய ஏனைய சைவ நூல்களையும் அமைத்துப் பாகுபாடு செய்தார். திருமுறை என்பதில் உள்ள ‘முறை’ என்ற சொல்லுக்கு நூல் என்பது பொருள். சேக்கிழார், முறை என்ற சொல்லை ‘நூல்’ என்ற பொருளில், ‘திருமுறை எழுதுவோர் வாசிப்போர்’ என்று கணநாதர் புராணத்தில் ஆண்டுள்ளார். திருமுறைகள் பன்னிரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் முதல் மூன்று திருமுறைகள். திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்கள் நான்கு முதல் ஆறு திருமுறைகள். சுந்தரமூர்த்திசுவாமிகள் பாடல்கள் ஏழாம் திருமுறை. திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை. ஒன்பதாம் திருமுறை, சேந்தனார் முதலியோர் பாடிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு முதலியன. திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. பதினோராம் திருமுறை திருவாலவாயுடையார் காரைக்கால் அம்மையார் முதலியோர் பாடிய நூல்கள். சேக்கிழார் பாடிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை. திருமுறைகளையும், அருணகிரிநாதர் பாடல்களையும் ஓதி உணர்ந்த ஒருவர் அவற்றை இயற்றிய புலவர்களின் சிறப்பியல்புகளை, வாக்கிற்கு அருணகிரி வாதவூ ரர்கனிவில் தாக்கில் திருஞான சம்பந்தர்-நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்திற்குச் சுந்தரனார் சொற்குஉறுதிக்கு அப்பர்எனச் சொல் என்ற வெண்பாவில் கூறியுள்ளார். நால்வர் புகழ் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியவரை ‘நால்வர்’ என்று குறிப்பிடுவர். மூவர் தேவாரமும், மணிவாசகரின் திருவாசகமும் பெரும் புகழ் பெற்றவை. தாயுமானவர், மொழிக்கு மொழி தித்திப்பாக மூவர் சொலும் தமிழ் என்று பாராட்டுகின்றார். |