தேவாரத்தில் உள்ள இனிய இசையின் மாண்பை, வெந்தழல் நீராமால் வெள்ளெலும்பு பெண்ணாமால் வந்த மதவேழம் வணங்கிடுமால்-சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர் என்ற வெண்பாவால் அறியலாம். நால்வரின் பெருமை, சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும்என் சுந்தரனும் சிற்கோல வாதவூர் தேசிகனும் - முற்கோலி வந்திலரேல் நீறுஎங்கே மாமறைநூல் தான்எங்கே எந்தைபிரான் ஐந்துஎழுத்து எங்கே என்ற பாடலால் வெளிப்படுகின்றது. உரை இல்லாத குறை திருமுறைகளுக்குப் பழைய உரையாசிரியர்கள் உரை எழுதாதது நம் தவக்குறைவேயாகும். “சைவ அடியார்களின் அருள் வாக்கிற்கு - சிவனருட் செல்வர்களின் திருப்பாடலுக்கு-ஆண்டவனே விரும்பிக்கேட்ட தெய்வப்பாடலுக்கு - ஆற்றல் மிகுந்த மறைமொழிக்கு எளியவர்களாகிய நாம் உரை எழுத முடியுமா? நாம் எங்கே, திருமுறை எங்கே!” என்று எண்ணி திருமுறைகளைத் தொழுது போற்றிக் கற்று, உரை எழுதாமல் முன்னோர்கள் சென்று விட்டனர். திருமுறைகளைக் கற்ற நம் முன்னோர்களிடம், அறம்உரைத் தானும் புலவன்;முப் பாலின் திறம்உரைத் தானும் புலவன்; - குறுமுனி தானும் புலவன்; தரணி பொறுக்குமோ யானும் புலவன் எனில் என்ற நினைப்பே நெஞ்சில் நிலவிவந்தது. சைவ சமயவுலகில் திருமறைகளுக்கு உரை எழுதக் கூடாது என்ற கொள்கை பன்னெடுங்காலமாக நிலவி வந்தது. திருவாதவூரர்புராணம் கூறும் வரலாறு ஒன்று இக்கொள்கையை வற்புறுத்தப் பெருந்துணையாக இருந்தது. “தில்லைவாழ் அந்தணர் ஒருங்குகூடி, தில்லையில் எம்பெருமானைச் செப்பிய தமிழ் மாலையின் பொருளைக் கூறுமாறு மாணிக்கவாசகரை வேண்டினர் என்றும், அதற்கு அவர், அருளுக்கு இடமான செம்பொனின் அம்பலம் எய்தி ‘ஒன்றிய இத் தமிழ்மாலைப் பொருள் இவர்’ என்று உரை செய்து மன்றதனில் கடிதேகி மறைந்தனர்” என்றும் திருவாதவூரர் புராணம் கூறுகின்றது. இவ் வரலாற்றை நினைந்து, ‘திருவாசகத்திற்கும் ஏனைய திருமுறைகளுக்கும் உரை எழுதக் கூடாது; அவற்றின் உட்பொருளை |