அடியவர்களே ஓதி ஓதி உணர்ந்து இன்புற வேண்டும்; உள்ளத்தால் உணர்கின்ற உயர்கருத்தை நாவால் உரைப்பதும் கையால் எழுதுவதும் கூடாது; எழுத்தும் சொல்லும் திருமுறைகளின் உட் பொருளை உணர்த்தா’ என்று சைவ அடியவர்கள் திருமுறைக்கு உரை எழுதாது விட்டனர். இக்கொள்கையால் காலப்போக்கில் திருமுறைகளைப் பொருளுணர்ந்து ஓதும் பழக்கம் குறைந்தது. பொய்யுரையும் போலி விளக்கமும் பெருகின. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சைவமும் தமிழும் நன்கு அறிந்த சான்றோர்கள், உரை இயற்றி இருந்தால் எவ்வளவு பெரும் பயன் விளைந்திருக்கும்! ‘கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போல’த் திருமுறையும் உரையும் சேர்ந்து சைவர்களுக்குச் சுவையூட்டி இருக்குமே! மாணிக்கவாசகர், சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து (சிவபுராணம் 92-95) என்று கூறியுள்ளார். சிவபெருமானின் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லவேண்டாமா? பொருளுணர்ந்து சொல்ல வேண்டுமாயின், திருவாசகம் போன்ற அருட்பாடல்களுக்குப் பொருள் எழுதுவது தவறாகுமா? இத்தகைய எண்ணம் பிற்காலச் சைவ அன்பர்களுக்குத் தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரு முறைகளுக்கு உரைகாணும் முயற்சி எழுந்தது. அப்போதும் திருவாசகம் போன்ற அருள் நூல்களுக்கு உரை எழுதும் தகுதி தம்மிடம் இல்லை என்றுகூறி ஒதுங்கிவிட்டவர் உண்டு. டாக்டர் உ,வே. சாமிநாத ஐயர் நண்பராகிய வித்துவான் தியாகராச செட்டியார் சிறந்த தமிழ்ப் புலவர். அவரது பெரும்புலமையை அறிந்த அக்காலத் திருச்சிராப்பள்ளிக் கலெக்டர் பட்டாபிராமபிள்ளை, செட்டியாரைத் திருவாசகத்திற்கு உரை எழுதுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். ஒரு நாள் நண்பகலில் செட்டியாரைக் கலெக்டர் காவிரிப் பாலத்தில் சந்திக்க நேர்ந்தது. மிக ஆவலுடன் கலெக்டர் செட்டியாரை நோக்கி “திருவாசக உரை எழுதிவிட்டீரா?” என்றார். உடனே செட்டியார் “அதற்கு நானா உரை எழுதுவது? திருவாசகம் எங்கே? நான் எங்கே? அதற்கு உரை எழுதுவதற்கு என் படிப்பு எம்மாத்திரம்?” என்று கூறினார். கலெக்டர் செட்டியாரை உரை எழுதுமாறு மேன் |