மேலும் வற்புறுத்திப் பேசினார். செட்டியார் கடுங்கோபம் கொண்டு, “இப்படிக் கண்டகண்ட இடங்களில் எல்லாம் நச்சு நச்ச என்று என்னைத் துன்புறுத்துவீர்களா? இனிமேலும் இப்படித் தொந்தரவு செய்வதாய் இருந்தால் இதோ இப்படியே காவிரியில் பொத்தென்று விழுந்து என் பிராணனை விட்டு விடுவேன்!” என்று கூறினார். உடனே கலெக்டர், “ஐயா! ஐயா! வேண்டாமையா!” என்று தடுத்து நிறுத்திப் பணிவாகச் சொன்னார். இவ்வரலாற்றினை டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் எழுதியுள்ளார்.* வைணவமும் சைவமும் ஆழ்வார்களின் பாடல்களாகிய நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்குப் பழங்கால உரையாசிரியர்கள் விளக்கங்கள் எழுதி அப்பாடல்களுக்குச் சிறப்பு நல்கினர். அவ்விளக்கவுரைகள் சைவ அன்பர்களின் பாராட்டுதலையும் பெற்றுள்ளன. இத்தகைய அரிய பெரிய விளக்கவுரைகள் திருமுறைகளுக்கு இல்லையே’ என்ற ஏக்கம், சைவர்களிடம் ஏற்பட்டது. அதன் விளைவாக மிகப் பிற்காலத்தில்தான் திருமுறைகளுக்கு உரைகள் எழுதப்பட்டன. திருமுறைகளில் திருக்கோவையாருக்குத்தான் பழங்காலத்தில் தோன்றிய உரைகள் இரண்டு உள்ளன. ஒன்று இயற்றியவர் பெயர் தெரியாத பழையவுரை; மற்றொன்று நல்லறிவுடைய தொல்பேராசான் எனச் சிறப்பிக்கப்பெறும் பேராசிரியர் இயற்றியது. இவ்வுரையும் திருக்கோவையாரை ஓர் இலக்கியமாகக் கருதியே அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவையாருக்குப் பேராசிரியர் உரை இயற்றியது இலக்கியப் பணியேயன்றி, சமயப் பணி என்பதற்கு இடமில்லை. ஆழ்வார்களின் பாடல்களுக்கு வைணவ உரையாசிரியர்கள் வியாக்கியானங்கள் இயற்றிய காலத்தில் சைவப் பெருமக்கள் வேறு துறையில் பணியாற்றினர். சைவ சித்தாந்த நூல்களை இயற்றிச் சாத்திர அறிவை வளர்க்கும் பணியில் முனைந்து நின்றனர். அதன் விளைவாய்ச் சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு தோன்றின. சாத்திர நூல்கள் தோன்றிய பின்னரும், சைவப் பெருமக்கள் திருமுறைகளுக்கு உரை இயற்ற முயலாமல், சாத்திரநூல்களுக்கே தம் அறிவுத் திறனையும் ஆராய்ச்சி வன்மையையும் காட்டி உரை வகுத்தனர். வைணவ உரையாசிரியர்களைப் போல் மணிப்பிரவாள நடையை-பேச்சு மொழியை-கையாளாமல் தனித் தமிழ் நடையையும், வடித்த சொற்களையும் * வித்துவான் தியாகராச செட்டியார் (1947) பக்கம் 142-145. |