பக்கம் எண் :

519ஆய்வு

இலக்கண வரம்புடைய வாக்கிய அமைப்பையும் தம் உரையில்
பயன்படுத்தினர். வடசொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களைத் தேடித்
தந்தனர். கலைச் சொற்களைப் படைக்கும்போதும் தமிழ் வேர்ச்சொற்களைக்
கொண்டே படைத்துக்கொண்டனர்.

உரையும் விளக்கமும்

    திருமுறைகளில் திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம்
ஆகியவற்றிற்கே பல உரைகளும் விளக்கங்களும் பிற்காலத்தில்
தோன்றியுள்ளன. ஏனைய திருமுறைகளில் சில பகுதிகளுக்கும் சில
பாடல்களுக்கும் உரையும் விளக்கமும் எழுதப்பட்டுள்ளன. திருமுறைகள்
பன்னிரண்டிற்கும் உரை இல்லாததால் ஏற்படும் துன்பத்தைத் தமிழறிஞர்
கி.வ. ஜகந்நாதன் பின்வருமாறு உரைக்கின்றார்:

     “பன்னிரண்டு திருமுறை முழுவதையும் படித்துப் பொருள் உணர்ந்து
இன்புறல் மிகமிக அருமையான காரியம். எல்லாப் பாடல்களுக்கும் பொருள்
தெளிவாக விளங்கும் என்று சொல்ல முடியாது. பழங்காலத்தில் திவ்வியப்
பிரபந்தத்துக்குச் சில பெரியோர்கள் உரை வகுத்ததுபோல் திருமுறைகளுக்கும்
யாரேனும் வகுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இப்போதுள்ள
மூலத்தில் எத்தனையோ பிழைகள் இருக்கின்றன. பல பாடல்களுக்கு
எத்தனைதான் மண்டையை உடைத்துக் கொண்டாலும் பொருள்
விளங்குவதில்லை.”*

திருவாசகவுரைகள்

    வைணவ உலகில், நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய் மொழி
சிறந்து விளங்குவதுபோல, சைவ உலகில் மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம் சிறந்து விளங்குகின்றது. திருவாய்மொழியைப்போல்,
திருவாசகத்திற்கும் பல உரைகள் தோன்றியுள்ளன.

     திருவாசகத்தை, “வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன்” என்று
சைவ அன்பர்கள் போற்றுவர். திருவாசகம், கல்நெஞ்சத்தையும் கனிவிக்கும்
தன்மை வாய்ந்தது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”
என்பது பழமொழி. சிவப்பிரகாச சுவாமிகள் நால்வர் நான்மணி மாலையில் (4),

    திருவா சகம்இங்கு ஒருகால் ஓதின்,
    கருங்கல் மனமும் கரைந்துஉகக் கண்கள்
    தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
    மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி


 * உள்ளங் கவர் கள்வன் - முன்னுரை, பக்கம் 5.