இங்கும் சென்று போக்குவழி பெறாமல் உழன்று அக்கொள்ளிக்குப் பற்றுக்கோடாக உள்ளது ஒன்றைத் தானும்பற்றி ஒருவாறு உய்யவும் கூடும். அக்கொள்ளி நிலத்தில் கிடந்தால் அவ் எறும்பும் நிலத்தில் இறங்கலாம். அஃது ஒன்றில் சார்த்தப்பட்டு இருந்தால், அச் சார்ச்சிப் பொருளைத் தானும் பற்றி உய்யலாம். அக் கொள்ளி உள் துளையுடைய மூங்கிலாக இருக்க, முன்னரே அதன் துளையுள் ஓர் எறும்பு நுழைந்திருக்குமாயின், இருபுறமும் நெருப்பு எரியுங்கால் அதனுள்பட்ட அவ் எறும்புக்கு எவ்வாற்றானும் உய்யும் நெறி இன்று என்பது கண்கூடாகக் காணத்தக்கது. இந்நயம் கருதியே கொள்ளி மேல், நடு என்னாது, இருதலைக் கொள்ளியின் ‘உள் எறும்பு ஒத்து’ என்றார் என்க.” நவநீதகிருஷ்ண பாரதியார்: இவர் உரை ஆராய்ச்சிப் பேருரையாகும். இவரது அகன்ற புலமையையும் ஆழ்ந்த அனுபவத்தையும் உரை வெளிப்படுத்துகின்றது. இவர், திருவாசகம் முழுதும் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் அகப் பொருள் நுதலி வருவதாகக் கருதி உரை கண்டுள்ளார். சிவபுராணம்-திருவாசகத்தின் தற்சிறப்புப் பாயிரம்; திருச்சதகம்-நுதலிய பொருள்; நீத்தல் விண்ணப்பம்-நுதலிய பொருள்; மேல்வருவன எல்லாம் காதல் பாவனை என்பது இவர்தரும் குறிப்பு. இவர் உரை, கருத்து பொழிப்பு விசேடம் ஆகியவற்றுடன் சிறப்பாக அமைந்துள்ளது. தண்டபாணிதேசிகர்; இவர் உரை 1964ஆம் ஆண்டில் வெளிவந்தது. பலவுரைகளின் துணைகொண்டு, சிவஞான முனிவர் போன்றார் தந்த விளக்கங்களை ஊன்றுகோலாகக் கொண்டு தேவையான விளக்கக் குறிப்புகளுடன் இவர் உரை அமைந்துள்ளது. திருமந்திரவுரைகள் திருமூலர் இயற்றிய திருமந்திரத்திற்குத் திருமந்திரமாலை என்ற பெயரும் உண்டு. இதனால், திருமந்திரம் அந்தாதி நூலாக இருக்கலாம் என்பர். இந்நூலைச் சைவ அன்பர்கள் தோத்திரமாகவும் சாத்திரமாகவும் கருதிப் பயில்கின்றனர். திருமந்திரத்திற்குத் திரிசிரபுரம் அ. சிவானந்த சாகர யோகீசுவரர் இயற்றிய உரை ஒன்று உண்டு. யாழ்ப்பாணம் விசுவநாதம் பிள்ளை 1912 ஆம் ஆண்டில் திருமந்திரத்திற்குக் குறிப்புரை எழுதி வெளியிட்டார். 1913 ஆம் ஆண்டு சேற்றூர் இரா. |