பக்கம் எண் :

உரையாசிரியர்கள்524

சுப்பிரமணியக் கவிராயர் நூறு பாடல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார்.
இலங்கையில் பரமேசுவரக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த நவநீத
கிருஷ்ண பாரதியார் (1889-1954) திருமந்திரத்திற்கு உரை இயற்றினார்.
இவர்களேயன்றிச் சேலம் சுந்தர முதலியார், (20-நூற்), வை.வே. ரமண
சாஸ்திரியார் ஆகியோரும் உரை இயற்றியுள்ளனர்.

பெரியபுராணவுரைகள்

    மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத்தமிழில் “பக்திச் சுவை
நன் சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று சேக்கிழாரைப்
போற்றுகின்றார். சிவனடியார்களின் பெருமையைப் பெரியபுராணத்தில் பாடி,
சிவனருட் செல்வர்களின் புகழைப் பரப்பியவர் சேக்கிழார்.

     பெரியபுராணத்திற்கு அண்மைக் காலத்தில்தான் உரைகள் தோன்றின.
தொழுவூர் வேலாயுத முதலியார் (1832-1889) பெரியபுராண வசனம் எழுதி
அந்நூலை மக்களிடையே பரப்பிப் பக்திப்பயிர் வளர்த்தார். ஆறுமுக
நாவலர் பெரியபுராண வசனம், பெரியபுராண சூசனம் இரண்டும் இயற்றினார்.
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் (?-1870), ஆலால சுந்தரம் பிள்ளை (1853 -
1923) ஆகியோர் பெரியபுராணத்திற்கு உரை இயற்றினர். திரு. வி. கல்யாண
சுந்தரனார் பெரியபுராணக் குறிப்புரை எழுதினார். அவ்வுரையின் இரண்டாம்
பதிப்பு, முதற் பதிப்பைவிடத் திருத்தம் பெற்றது. அதனை அவரே தம்
வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற நூலில் (பக்கம்-142) “பெரிய புராணம்
இரண்டாம் பதிப்பில் புரட்சி நிகழ்ந்துள்ளது. உரிமை, புரட்சியை நிகழ்த்தி
நிலைமையைச் சீர் செய்வது இயற்கையே. என்ன புரட்சி? ஜைனத்தைப்
பற்றிச் சைவ உலகில் சில கறைகள் படிந்தன. அக்கறைகள் உரையால்
களையப்பட்டன. அக் களைவே புரட்சியாயிற்று” என்று குறிப்பிடுகின்றார்.

     சிவக் கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் பெரிய புராணத்திற்கு
மிக விரிவாக உரை எழுதியுள்ளார். இவர் உரை காலத்தை வென்று
நிலைபெறும். பல வகையான அரிய விளக்கங்களும், நாயன்மார்கள் தல
யாத்திரை செய்த வழிகளை விளக்கும் தரைப்படங்களும் (Maps) உரையில்
இடம் பெற்றுள்ளன.

     இவ்வுரை இயற்றும் பணியை இவர் தம் வாழ்வின் தலையாய
பெரும்பணியாகக் கருதி உழைத்து, தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்
தொண்டாற்றியுள்ளார்.