3. சைவ சித்தாந்த உரைகள் வேதாந்தம் என்னும் மரத்தினில் பழுத்த கனியின் சாரமே சைவ சித்தாந்தம் என்று போற்றுகின்றார் குமர குருபரர்: வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை ! பாதபம் அதனில் படுபயன் பலவே-அவற்றுள் இலைகொண்டு வந்தனர் பலரே; இலைஒரீஇத் தளிர்கொண்டு வந்தனர் பலரே; தளிர்ஒரீஇ அரும்பொடு மலர்பிஞ்சு அருங்காய் என்றிவை விரும்பினர் கொண்டு வந்தனர் பலரே; அவ்ஆறு உறுப்பும் இவ்வாறு பயப்ப, ஓரும் வேதாந்தம் என்று உச்சியிற் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்து சாரம் கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுது அருந்தினர் சிலரே. -பண்டார மும்மணிக்கோவை சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு. அவற்றின் பெயர்களை, உந்தி களிறோ டுயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மைப் பிரகாசம்-வந்தஅருள் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று என்ற வெண்பா உரைக்கின்றது. 1. திருவுந்தியார் 2. திருக்களிற்றுப் பாடியார். 3. சிவஞான போதம். 4. சிவஞான சித்தியார். 5. இருபா இருபஃது. 6. உண்மை விளக்கம். 7. சிவப்பிரகாசம், 8. திருவருட்பயன். 9. வினா வெண்பா. 10. போற்றிப் பஃறொடை. 11. கொடிக்கவி. 12. நெஞ்சுவிடு தூது. 13. உண்மை நெறி விளக்கம். 14. சங்கற்ப நிராகரணம் ஆகிய பதினான்கு நூல்களைச் சைவ சமயச் சான்றோர் ஐவர் இயற்றினர். உய்யவந்தார், மெய்கண்டார், அருள் நந்தியார், மன வாசகங்கடந்தார், உமாபதி சிவனார் ஆகிய ஐவரும் மேலே கூறிய பதினான்கு நூல்களையும் இயற்றினர். இவர்களுள் மெய்கண்டாரின் மாணவர் மனவாசகங் கடந்தார். அருள் நந்தியாரின் மாணவர் உமாபதி சிவனார். ஆசிரியரும் நூல்களும் I. உய்யவந்தார்-1. திருவுந்தியார் 2. திருக்களிற்றுப் பாடியார். II. மெய்கண்டதேவர்-3. சிவஞான போதம். |