பக்கம் எண் :

உரையாசிரியர்கள்526

     III. அருள் நந்தியார்- 4. சிவஞான சித்தியார்
 
                     5. இருபா இருபஃது.

     IV. மனவாசகங் கடந்தார்-6. உண்மை விளக்கம்.

     V. உமாபதி சிவனார்-7. சிவப்பிரகாசம் 8. திருவருட் பயன் 9. வினா
          வெண்பா 10. போற்றிப் பஃறொடை 11. கொடிக்கவி 12. நெஞ்சு
          விடு தூது
13. உண்மை நெறி விளக்கம் 14. சங்கற்ப நிராகரணம்.

     சைவ சித்தாந்த நூல்களுள் சிவஞான போதமும், சிவஞான சித்தியார்,
சிவப்பிரகாசம் ஆகிய மூன்று நூல்களுக்கும் மிகுதியான உரைகள்
தோன்றியுள்ளன. அவற்றை இங்கே விரிவாகக் காண்போம்.

சிவஞான போதம்

    தமிழ்மொழியிலுள்ள சைவசித்தாந்த நூல்கள் பதினான்கனுள் சிவஞான
போதம் தலைமையும் சிறப்பும் வாய்ந்தது. இதனை இயற்றியவர்
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவநாயனார். இவரது காலம் பதின்
மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

     சிவஞான போதத்தினுள் பன்னிரண்டு சூத்திரங்கள் உள்ளன.
பன்னிரண்டு சூத்திரங்களும் நாற்பது வரிகளையுடையவை. இந்நூலில்,
பன்னிரண்டு சூத்திரங்களையும் ஏதுக்கள்கொண்டு, விளக்கி உரைக்கும்
முப்பத்தொன்பது அதிகரணங்கள் உள்ளன; எடுத்துக்காட்டுகளாக அமைந்த
81 வெண்பாக்கள் உள்ளன.

     பன்னிரண்டு சூத்திரங்களில் முதல்ஆறும் பொது அதிகாரம்
என்றும், பின் ஆறும் உண்மை அதிகாரம் என்றும் பெயர் பெறும். பொது
அதிகாரத்தில் உள்ள முதல் மூன்று சூத்திரங்கள் பிரமாண இயலிலும் பின்
மூன்றும் இலக்கண இயலிலும் அடங்கும். உண்மை அதிகாரத்தில் உள்ள
முதல் மூன்று சூத்திரங்கள் சாதன இயலிலும், பின் மூன்றும் பயனியலிலும்
அடங்கும்.

     பன்னிரண்டு சூத்திரங்களும் கூறும் பொருளை இனிக் காண்போம்:

     முதற் சூத்திரம் பதி (இறைவன்) உண்மையை உணர்த்துகின்றது.
இரண்டாம் சூத்திரம் பாச உண்மையையும், மூன்றாம் சூத்திரம் பசு (உயிர்)
உண்மையையும் கூறுகின்றது. நான்கு ஐந்து ஆறு சூத்திரங்கள் முறையே பசு
பாச பதி இலக்கணத்தை விளக்குகின்றன. ஏழாம் சூத்திரம் முத்திபெறுவதற்கு
ஏதுவாகிய உயிரின் சிறப்பிலக்கணமும், எட்டாம் சூத்திரம் சிவஞானத்தை