வினைச் சொல் எனவும், பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையும் தம்மான் அன்றித் தத்தம் குறிப்பான் உணர்த்தும் சொல் இடைச் சொல் எனவும் பகுக்கப்பட்டன. “எல்லாம் பொருள் என்பதற்கு ஒரோவழி உரிமை உடைமையின் அதுபற்றிப் பண்பும் தொழிலும் பொருள் எனவும் படும் ஆகலின், அவற்றை உணர்த்தும் உரிச் சொல்லும் ஒரோ வழிப் பெயர்ச் சொல் எனப்படும்; இடைச் சொல்லும் ஒருவாற்றாற் பெயரே ஆம்.” (சூத்திர விருத்தி) எகரம் “எகரமாவது அகரக் கூறும் இகரக் கூறும் தம்முள் ஒத்து இசைத்து, நரமடங்கல்போல நிற்பதொன்று” (சூத்திர விருத்தி) அநுவாதம் “முன்னர்ப் பெறப்பட்டது ஒன்றினை வேறு ஒன்று விதித்தற் பொருட்டுப் பின்னரும் எடுத்து ஓதுதல்.” (சூத்திர விருத்தி) மறுத்தல் சிவஞான முனிவர் தமக்கு மாறுபட்ட கருத்தை எவர் கூறினும் அஞ்சாது மறுக்கும் இயல்புடையவர். தொல்காப்பிய உரையாசிரியர்களில் சேனாவரையரை இவர் பாராட்டுகின்றார்: இளம்பூரணரை மதிக்கின்றார். நச்சினார்க்கினியரைப் புறக்கணிக்கின்றார். ‘வட நூற்கடலை நிலைகண்டு அறிந்த சேனாவரையர்’ என்று பாராட்டுகின்ற இவர் இளம்பூரணரை, ‘தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்’ என்று கூறுகின்றார். நச்சினார்க்கினியரை ‘யாம் பிடித்ததே சாதிப்போம் என்னும் செருக்கால் மயங்குபவர்’ என்று குறிப்பிடுகின்றார். முன்னோரைப் பின்பற்றல் தமக்குமுன் வாழ்ந்த சான்றோர் உரைகளைப் பின்பற்றி இவர் உரை எழுதும் இடங்களும் உள்ளன. சிவஞான பாடியத்துள், (முதற் சூத்திரம், முதல் அதிகாரம்) “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், (தோற்றிய திதியே ஒடுங்கி உளதாம் என) உலகின்மேல் வைத்துக் கூறினார்: சங்கார காரணணாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம்” என்று இவர் கூறும் உரை, திருக்குறள் முதற் குறளுக்குப் பரிமேலழகர் கூறிய உரையைப் பின்பற்றியதாகும். பதினோராம் சூத்திர உரையில், “மொழிபெயர்த்தல் யாப்பான் நூல் செய்து உரைப்பான் புகுந்த ஆசிரியர் வேறுபடச் |