திறனுக்கும் இலக்கணப் புலமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகின்றது. சூத்திர விருத்தி, இலக்கண ஆராய்ச்சிக் களஞ்சியம்; அறிவுக்கு விருந்து; ஆராய்ச்சிக்கு ஊற்று; புலமைக்கு வற்றாத இன்பம். இந்நூலைக் கற்றால்அன்றித் தமிழ் மொழி இலக்கணப்புலமை நிரம்பப்பெறாது. இந்நூலில் எத்தனையோ அரிய செய்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளார். இவர் கூறும் முடிவு, எல்லோருக்கும் உடன்பாடு அன்று எனினும் இவர் எழுப்பும் ஐயம், தடை, விடைகள், மறுக்கும் முறை, தம் கருத்தையே நிலை நாட்டும் வன்மை ஆகியவற்றை அனைவரும் போற்றி மதிப்பர். நன்னூல் விருத்தியுரையில் உள்ள சில பகுதிகள் எவ்வித மாறுதலும் இன்றி இந்நூல் இடம்பெற்றுள்ளன. இலக்கணவிளக்கச் சூறாவளி, சிவஞான போதப் பேருரை ஆகிய உரைகளில் இவர், இலக்கணக் கருத்துக்களை மிக விரிவாக விளக்க வேண்டிய இடங்களில் ‘சூத்திர விருத்தியுள் காண்க’ என்று குறிப்பிடுகின்றார்; எனவே, சூத்திர விருத்தியே இவர் எழுதிய முதல் உரை நூல் ஆகும். 3. நன்னூல் விருத்தியுரை சிவஞான முனிவர் தமிழ் இலக்கண உலகிற்குச் செய்த பெருந்தொண்டுகளில் ஒன்று, நன்னூலுக்கு விருத்தியுரை இயற்றியதே ஆகும். சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு எழுதிய விருத்தியுரை சிலவிடங்களில் போதிய விளக்கம் இல்லாமல் இருப்பதை அறிந்து, முனிவர் அவ்விருத்தியுரையினைத் திருத்தி விரிவாக்கினார். முனிவர் உரை ‘புத்தம் புத்துரை’ என்று வழங்கலாயிற்று. சிவஞான முனிவர் விருத்தியுரையில் உள்ள இருவர் உரைகளையும் அடையாளம் கண்டு கற்பதற்கு உதவியாக, திருவாவடுதுறை ஆதீனத்தார் நன்னூல் உரையைப் பதிப்பித்துள்ளனர். அப் பதிப்பில் இருவர் உரைகளும் அடையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. முனிவர் நன்னூலுக்கு விருத்தியுரை கண்டபின் அவ்வுரையினைத் தழுவியே பிற்காலத்தில் எளிய உரைகள் பல நன்னூலுக்கு ஏற்பட்டன. தமிழ் இலக்கணம் கற்றுப் புலமை பெற விரும்புபவர்க்குச் சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தியுரை ஒரு நுழைவாயிலாக விளங்குகின்றது. |