பக்கம் எண் :

539ஆய்வு

4. இலக்கண விளக்கச் சூறாவளி

     திருவாரூர் வைத்தியநாத தேசிகர் ‘இலக்கண விளக்கம்’ என்னும்
பெயரைச் சூட்டி ஐந்திலக்கணம் கூறும் நூல் ஒன்றை இயற்றினார். அந்நூலில்
உள்ள குற்றங்களை எடுத்துக் காட்டி ‘இலக்கண விளக்கச் சூறாவளி’
என்ற பெயரால் மறுப்பு நூல் ஒன்றினைச் சிவஞான முனிவர் இயற்றினார்.
(இலக்கண) விளக்கை அணைக்க, சூறைக்காற்றை (சூறாவளி) எழுப்பினர்.

     இலக்கண விளக்கச் சூறாவளி, சிவஞான முனிவரின் ஏனைய மறுப்பு
நூல்களைப்போல அத்துணை விரிவாகவும், தெளிவாகவும் அமையவில்லை.
இந்நூலில் மறுக்கப்படும் கருத்து. அதில்உள்ள குற்றம், அதைப்பற்றிய
தடைவிடைகள், யாவரும் ஒப்பத் தக்க முடிவு ஆகியவற்றைக்
காணமுடியவில்லை. இலக்கண விளக்கச் சூத்திரத்தை முழுமையாகக்
காட்டாமல், தொடக்கம் மட்டும் காட்டி மறுப்புரைகளையும் விரிவாகத்
தராமல் ‘இவற்றைத் தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தியுள் காண்க’ என்று
பல இடங்களில் கூறிவிடுகின்றார். எனவே, இம்மறுப்பு நூலைக் கற்போர்,
இலக்கண விளக்கம், தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி ஆகிய
இரண்டினையும் நன்கு பயின்றவராக இருத்தல் வேண்டும்; நல்ல
நினைவாற்றலோடு முன்பின் நோக்கி எளிதில் உணர்பவராய் இருத்தல்
வேண்டும்.

     இந்நூல் ஒன்றே, நூலாசிரியரை மறுத்து எழுந்த மறுப்பு நூலாகும்.

     இலக்கண விளக்கச் சூறாவளியின் பெருமையினைத் தமிழறிஞர் வி.கோ.
சூரியநாராயண சாஸ்திரியார் பின்வருமாறு கூறிப் போற்றுகின்றார்.

     “திருவாவடுதுறைச் சிவஞான சுவாமிகள், நாவலருடைய இலக்கண
விளக்கத்தை அவிகும்பொருட்டுச் சூறாவளியை ஏவினர். இச்சூறாவளியை
‘அநியாய கண்டனம்’ என்று மகா-ரா-ரா-ஸ்ரீ சி.வை.தாமோதரம்
பிள்ளையவர்கள் கூறுவது போல் நாம் ஒரு காலத்தும் சொல்லப்படாது.
இக்கண்டனத்தை அவர் வேண்டுமென்று எழுதினபோதிலும் சில இடங்களில்
நமது நாவலர் செய்த பிழைகளையும் எடுத்துக்காட்டிஇருக்கின்றனர்.
சூறாவளியின் மூலமாயே நம் இலக்கண விளக்கத்திற்கு அதிகமேன்மை
என்று யாவரும் அறிதல் வேண்டும்.’ *


 * தமிழ்ப் புலவர் சரித்திரம் (1950) பக். 49.