சிவஞான முனிவர், இலக்கண விளக்கத்தில் எண்பதுக்கு மேற்பட்ட இடங்களை (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இரண்டில் மட்டும்) மறுக்கின்றார். சிலவற்றை மிகைபடக் கூறல் என்றும், வேறு சிலவற்றைக் குன்றக் கூறல் என்றும், இன்னும் சிலவற்றை மாறுகொளக் கூறல் என்றும் குற்றங்கள் கூறி மறுக்கின்றார். பதவியல் முதற் சூத்திர மறுப்பில், “இவர் கூறியவற்றுள் குற்றங்களை விரிக்கப்புகின், விளையாட்டு மகளிர் இட்ட மணற் சோற்றில் கல் ஆராயப் புகுதலோடு ஒக்கும்” என்று மிக வன்மையாகக் கூறுகின்றார். மறுப்புரைகள் சிலவற்றைக் காண்போம்: “ஈண்டை விதிகளை நன்னூலார் போலச் சாலவும் சொற் சுருங்கச் சூத்திரித்தும், சிலவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் போலச் சாலவும் சொற்பல்கச் சூத்திரித்தும் ஒரு வழிப்பட நில்லார் ஆயினார்” (உயிர் ஈற்று-35.) “தாம் செய்த நூல்முறைபற்றி உரை செய்யாது, தொல்காப்பியத்திற் கிடந்தவாறே படி எடுத்து எழுதித் தமது அறியாமையை விளக்கினார் என அறிக”. (உயிர் ஈற்று-11) இலக்கண விளக்க ஆசிரியர் ‘பதவியல்’ என்று பெயரிட்டது பொருந்தாது என்பதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றார்: ‘நன்னூலார் பதவியல் கூறியதற்கு முதல்நூல் வடநூல் ஆதலின், அது தோன்ற மொழியில் என்னாது பதவியல் என வட சொல்லான் அதற்குப் பெயரிட்டு, அவ் ஓத்துள் வடவெழுத்துத் தமிழில் வருமாறு கூறினார். இவர் தமிழ்மொழி மாத்திரைக்கே இலக்கணம் கூறுதும் எனப் புகுந்தமையால் பதவியல் என வடமொழியால் குறியிடுதல் பழுதாம் என்க.’ இலக்கண விளக்க ஆசிரியர் ஆண்பால் பெண்பால் என்ற வழக்கு அஃறிணைக்கு இல்லை என்று கூறுகின்றார் (பெயரியல்-6). இதனைச் சிவஞான முனிவர், ‘ஆண்பால் பெண்பால் வழக்கு உயர்திணைக்கே அன்றி அஃறிணைக்கு இன்று என்றார். ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய’ என்னும் மரபியல் சூத்திரங்களையும், ஆண்மை சுட்டிய பெயர், பெண்மை சுட்டிய பெயர் என்றும் குறியீடுகளையும், களிறு பிடி முதலிய வழக்குகளையும் மறந்தார் போலும்!’ என்று தம் ஆராய்ச்சித் திறன் வெளிப்படும் வகையில் மறுக்கின்றார். |