பக்கம் எண் :

541ஆய்வு

5. கம்பராமாயண முதற் செய்யுள்

சங்கோத்தர விருத்தி

     சிவஞான முனிவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தபோது, தமிழுக்குத்
தொண்டுகள் பல செய்து வந்தார். மாணவர் பலர் தோன்றினர். இவரிடம்
பாடம் கேட்டுத் தமிழறிவு பெற்றுப் பலர் சிறப்படைந்தனர். முனிவர்
புகழ், நகரமெங்கும் பரவியது. சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்கி
வளர்வதைக் கண்ட வைணவர் சிலர் முனிவரிடம் வந்து, கம்பரையும்,
அவரது புலமைத் திறத்தையும், பாடலின் உயர்வையும் பலவாறு புகழ்ந்து
பேசினர்; தமிழ் மொழியில் கம்பராமாயணம் போன்ற சிறந்த காவியம் வேறு
இல்லை என்றும் கூறினர். இவ்வாறு அவர்கள் செருக்கோடு பேசுவதைக்
கண்ட சுவாமிகள் அவர்கள் வாயை அடக்கக் கருதினார். கம்பராமயணத்தின்
முதற் செய்யுளாகிய ‘நாடிய பொருள்’ என்ற பாடலே இலக்கணப்படி பல
குற்றங்களை உடைய பாடல் என்று கூறினார். அப் பாடலில் உள்ள பல
குற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கூறினார்.

     வைணவர்கள் இவர் கூறும் குற்றங்களுக்குத் தக்க விடை கூறி மறுக்க
இயலாமல், சுவாமிகளை வணங்கி அறியாது கூறினோம் என்று பணிவாகக்
கூறினர்.

     அதன்பின்னர், சுவாமிகளே தாம் முன்பு அப்பாடலுக்குக் கூறிய
குற்றங்கள் அனைத்தையும் நீக்கிக்காட்டி விடை கூறினார். சுவாமிகள்
அப்பாடலுக்கு வாய்மொழியாகக் கூறிய வினாவிடைகளை யாவரும் உணர்ந்து
இன்புறவேண்டி எழுதித் தருமாறு காஞ்சிநகர்ச் சைவர்கள் வேண்டினர்.
அவ்வாறே சுவாமிகள் ‘கம்பராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி’
என்ற பெயருடன் சிறுநூல் ஒன்றைச் செய்து அளித்தார்.

     இவ்வாறு சிவஞான சுவாமிகள் செய்தது கம்பன் புலமைக்கோ,
வைணவ அன்பர்களுக்கோ தாழ்வு உண்டாக்கக் கருதி அன்று. ‘நாடிய
பொருள்’ என்று தொடங்கும் பாடல் கம்பர் பாடல் அன்று என்றும்
கூறுவர். பெரியோர் பாட்டில் பிழைகண்ட தாழ்வும் சிவஞான முனிவருக்கு
உண்டாகாது. ஒரே பாட்டில் இவர் எழுப்பியுள்ள இருபத்து இரண்டு
குற்றங்களும் இவரது இலக்கணப் புலமையை - அறிவு வளத்தை -
ஆராய்ச்சித்திறனை வெளிப்படுத்துகின்றன. இவற்றினும் மேலாக
அவ்வினாக்களுக்கு இவரே விடைகளும் கூறிப் பிழை நீக்கிக் காட்டியது
மிக வியப்பைத் தருகின்றது. முடி போடுவது எளிது; அவிழ்ப்பது அரிது.
இரண்டும் வல்லவர் சிவஞான முனிவர்.