பக்கம் எண் :

உரையாசிரியர்கள்542

     சிவஞான முனிவர் ஒரு பாடலுக்கு எழுப்பிய வினாக்களையும்,
பின்னர்க் கூறிய விடைகளையும் அறிந்து கொள்ளும் விருப்பம் பலருக்கு
ஏற்படுவது இயல்பே. ஆதலின், கீழே பாட்டையும் முனிவர் அப்பாடலில்
கூறிய குற்றங்களையும் காண்போம்:

         நாடிய பொருள்கை கூடும்;
              ஞானமும் புகழும் உண்டாம்;
         வீடுயர் வழிய தாக்கும்;
              வேரியங் கமலை நோக்கும்;
         நீடிய அரக்கர் சேனை
             நீறுபட் டொழிய வாகை
         சூடிய சிலைஇ ராமன்
             தோள்வலி கூறு வோர்க்கே.

இதனுள் சங்கையும் உத்தரமும் வருமாறு: சங்கை சிறிது காட்டுதும்.

     1. ‘நாடிய பொருள்’ எனவே எல்லாம் அடங்குதலின், ‘ஞானமும்
புகழும் உண்டாம்’ எனவும், ‘வீடுயர் வழிய தாக்கும்’ எனவும், ‘வேரியங்
கமலை நோக்கும்’ எனவும் கூறுதல் கூறியது கூறலேயாம்.

     2. இனி, ஈண்டுக் கூறிய நாடிய பொருள் முதலியவற்றைத் தரும்
இராமனை, அவைதருதற்குரிய சத்துவகுணத் தொழிலான் விசேடித்துக்
கூறாது, ‘நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு ஒழிய வாகை சூடிய சிலை
இராமன்’ என உருத்திரச் சுவை தோன்ற, ஏனைக் குணத் தொழிலான்
விசேடித்துக் கூறுதல் சிறிதும் சிறப்பின்றாம்.

     3. இன்னும் சொற்றொறும் சிறது சங்கை காட்டுதும்.

     நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
     நாடா வளந்தரு நாடு                      (குறள் - 739)

என்பவாகலின், தேடிவருந்தாது பெறப் பொருள் கைகூடிடச் செய்தலே
செய்தலாம்; அவ்வாறன்றித் தேடிப் பெறப் பொருள் கைகூடிடச் செய்தல்
செய்யாமையோடு ஒக்கும் ஆதலின், ‘நாடாப் பொருள் கைகூடும்’ என்னாது
‘நாடிய பொருள்’ என்றல் சிறப்பிலதாம்.

     4. பொருள்கள் பல ஆதலின், பன்மைப் பாலால் கூறாது, பொருள்
என்றல் வழுவாம்.

     5. ‘கூடும்’ எனவே அமைந்திருப்ப, ‘கைகூடும்’ என்றல் வேண்டா
கூறலாம்.