19. பிரமாத்திரம் முதலிய ஏனைப் படைகளும் இருப்ப, சிலை இராமன் என ஒன்றனையே கூறல் அமையாதாம். 20. இராமனுக்கு அனந்த நற்குணங்கள் இருப்ப, தோள்வலியாகிய ஓர் ஏகதேச மாத்திரையே கூறல் சிறந்தது அன்றாம். 21. மனம் மொழி மெய்கள் என்னும் முப் பொறியுள் ஏனையவற்றை ஒழித்து, கூறுவோர்க்கு என ஒன்றன் வினை மாத்திரையே கூறல் சிறப்பிலதாம். 22. இன்னும் முதல் பாட்டில் ‘நீறுபட்டு ஒழிய’ என அமங்கலச் சொல்லை வைத்தலும் வழுவாம். மேலே காட்டிய இருபத்திரண்டு குற்றங்களை ஒரே பாட்டில் காட்டிய சுவாமிகள், ‘ஆதலின் இப் பாட்டு முழுதும் குற்றமே ஆம்’ என்றும் கூறுகின்றார். பின்னர், ‘பாட்டு முழுதும் குற்றமே ஆம் எனின், அற்றன்று’ என்று உரைத்து, ‘இனிச் சங்கைதீரப் பொருள் சிறிது காட்டுதும்’ என்று மேலும் தொடர்கின்றார். இவர் கூறப்போகும் விடைகளைக் கேட்க நம் உள்ளத்தில் ஆவல் எழுதல் இயற்கையே. அவ்விடைகளை, கம்பராமாயண முதற் செய்யுள் சங்கோத்தர விருத்தி என்னும் நூலில் கண்டு மகிழலாம். 6. மறுப்புரை நூல்கள் சிவஞான முனிவர் எழுதிய மறுப்புரை (கண்டன) நூல்கள் பலவாகும். சித்தாந்தமரபு கண்டனம், சிவ சமவாதவுரைமறுப்பு, ‘எடுத்து’ என்னும் சொல்லுக்கு இட்ட வைரக்குப்பாயம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். சித்தாந்த மரபு கண்டனம்: சித்தாந்த மரபு அல்லது மரபு அட்டவணை என்ற ஒரு நூல் துறைசை ஆதீனத்தார் ஒருவரால் இயற்றப்பட்டது. இந் நூலுக்கு கண்டனம் தருமை ஆதீனத்தாரால், ‘சித்தாந்த மரபு கண்டனம்’ என்ற நூல் இயற்றப்பட்டது. இக்கண்டன நூலால் மரபு அட்டவணை பிழையுடையது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், அக் கண்டன நூலில், மறுக்கத் தகாதவை சிலவற்றை எடுத்த மறுத்ததனால் சிவஞான முனிவர் அக்கண்டன நூலுக்கு ஒரு மறுப்புரை வரைந்தார். இந் நூலே, சித்தாந்த மரபு கண்டனம். |