பக்கம் எண் :

545ஆய்வு

      சிவசமவாத கண்டனம்: திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த
ஞானப்பிரகாசர், சிவஞான சித்தியாருக்கு எழுதிய உரைகளில், தமக்குப் பிழை
என்று தோன்றியவற்றிற்கு முனிவர் எழுதிய மறுப்பு நூல், சிவசமவாத
கண்டனம் எனப்படும்.

      ‘எடுத்து’ என்னும் சொல்லுக்கு இட்ட வயிரக்குப்பாயம்:
‘என்னை இப்பவத்திற் சேரா வகை எடுத்து’ என்றும் சிவஞான சித்தியார்
திருவிருத்தத்துள், ‘எடுத்து’ என்னும் சொல்லிற்கு ஞானப் பிரகாசர்,
‘சமனாந்தம் பாசக் கூட்டம் கூடாதவகை சின் மாத்திர சுத்த கேவலமாகச்
சேடிக்கப் பண்ணி’ என்று பொருள் கூறினார்.

     சிவஞான முனிவர், இவ்வாறு பொருள் கூறுவது பொருந்தாது
என்பதற்குப் பல காரணங்கள் காட்டி மறுக்கின்றார்.

     ‘குப்பாயம்’ என்ற சொல்லுக்குச் சட்டை என்பது பொருள்.

தனிப்பாடல் உரைகள்

    சிவஞான முனிவர் காஞ்சிநகரில் வாழ்ந்து தமிழ்ப் பணி புரிந்தபோது,
அவரிடம் அழுக்காறுகொண்ட போலிப் புலவர் சிலர், இரண்டு
தனிப்பாடல்கள் இயற்றி அவற்றிற்குப் பொருள் கூறுமாறு சுவாமிகளிடம்
அனுப்பினர். அவ்விரு பாடல்களையும் வாங்கிப் பார்த்துச் 
சுவாமிகள் மிக
அரியதொரு விரிவுரை எழுதி, சொல், பொருள், அணி, யாப்பு ஆகிய
பலவேறு வகையான இலக்கணக் குறிப்பும் தந்து அனுப்பினார்கள்.

     அப்பாடல்களுள் ஒன்று, ‘அங்கோழி முட்டை’ என்று
தொடங்குகின்றது. இன்னொன்று ‘எங்கணவன்’ என்று தொடங்கும் வெண்பா.

     ‘எங்கணவன்’ என்னும் வெண்பாவுக்கு எழுதிய விரிவுரையின் இறுதியில்
சுவாமிகள், “சங்கம் மரீஇய சான்றோர் அவரோடு ஒரு தன்மையராகிய
சான்றோர் செய்த இலக்கணத்தின் வராத செய்யுட்களின் பொருள்
நுட்பங்களை எம்மனோர்பால் கேட்பின் அமையும்; எதுகை வழுவும்
பருப்பொருளும், வெளிறிய சொல்லும் முதலிய குற்றங்களை உடையவராய்
இலக்கணத்திற் புறத்த, இன்னோரன்ன செய்யுட்களை இவ்வாறு செய்யுள்
செய்யவல்லாரைக் கேட்க அமையுமல்லது, அம்மனோரையும் அவரோடு
ஒருவராக்கி இவற்றையும் ஒன்றாகக் கேட்டல் அமையாது என அறிக” என்று
தக்க அறிவுரை ஒன்றை எழுதியுள்ளார்.