பக்கம் எண் :

547ஆய்வு

நயம் தருக்க நெறிமுறை சமயக் கொள்கைகளின் செப்பம் ஆகியவற்றை
இதில் காணலாம்.

     சிவஞான முனிவர், சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு மட்டும் உரை
இயற்றியுள்ளார். இவருக்கு முன்னரே சித்தியாருக்கு நால்வர் உரை
இயற்றியுள்ளனர். சிவாக்கிரம யோகிகள், மறைஞான தேசிகர், நிரம்ப அழகிய
தேசிகர், ஞானப் பிரகாச முனிவர் ஆகிய நால்வரும் உரை இயற்றினர்.

     ஞானப் பிரகாசர் இயற்றிய உரை, சிவசமவாதத்தைத் தழுவியது
ஆகலின் அதனைச் சிவஞான முனிவர் மறுத்தார்.

     சிவஞான முனிவரின் சித்தியார் உரைக்குச் சுப்பிரமணிய தேசிகர்
பதவுரை எழுதி அதனை எளிதாக்கியுள்ளார்.

     சிவஞான சித்தியாருக்கு முனிவர்  இயற்றியுள்ள உரை, பலவகை
அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்டதாய்ச் சிறப்புற்று விளங்குகின்றது.
சுபக்கக் காப்புச் செய்யுளில் ‘மும்மதம்’ என்பதற்கு முனிவர் கூறியுள்ள உரை
மிகவும் சிறப்பானது.

     இவருக்கு முன்னர் ‘மும்மதம்’ பற்றிப் பல கருத்துக்கள் நிலவிவந்தன.
விநாயகக் கடவுளுக்கு முகம் ஒன்றே, யானையின் உறுப்பாக
அமைத்திருத்தலின் மும்மதம் என்பது பொருந்தாது என்பர்  ஒரு சாரார்.
மும்மதம் என்பது முச்சக்திகளைக் குறிக்கும் என்பர் வேறொரு சாரார். ஒரு
கோடு, இரு செவி முதலியவை உருவகங்கள் அல்ல ஆதலின் மும்மதம்
என்பதனை மட்டும் முச்சக்தி என்று உருவகமாகக் கருதுதல் தவறு என்பர்
இன்னொரு சாரார்.

     சிவஞான முனிவர் இம் மூவகைக் கருத்துகளையும் ஆராய்ந்து,
விநாயகக் கடவுளுக்குக் கழுத்திற்குக் கீழே யானை வடிவம் இல்லை என்றும்,
மும்மதம் உருவகம் அன்று என்றும் எடுத்துக்கூறி, மும்மதம் என்பதில் ஒரு
மதமே ஏனைய இரு மதங்களையும் குறிக்கும் என்று விளக்கியுள்ளார்.

     இத்தகைய நயமான பகுதிகள் உரைமுழுதும் உண்டு.

9. சிவஞான போதப் பேருரை

    மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் சைவ சித்தாந்த
சாத்திரங்களுள் மிகவும் சிறந்தது என்று யாவராலும் போற்றப்படுகின்றது.
அந் நூலின் சிறப்பை,

    வேதம் பசு, அதன்பால் மெய்ஆ கமம், நால்வர்
    ஓதும் தமிழ்வேதம் உள்ளுறுநெய் - போதமிகு