நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம் என்ற வெண்பாவால் உணரலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலுக்குப் பேருரை ஒன்று பல காலமாய்த் தோன்றாமல் இருந்தது. வடமொழியில் வேதாந்த தத்துவத்திற்குச் சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகியோர் தோன்றி, பிரம்ம சூத்திரங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றிற்குப் பேருரைகள் எழுதியுள்ளனர். இவ்வுரைகள் வேதாந்த தத்துவத்திற்குத் தோன்றியதுபோலச் சைவ சித்தாந்தத்திற்குப் பல காலமாய்ப் பேருரை தோன்றாமல் இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞான முனிவர், சிவஞான போதத்திற்குப் பேருரை எழுதி அக்குறையை நீக்கினார். சிவஞான முனிவர் இயற்றியுள்ள பேருரை, பல சிறப்புகளை உடையது. சைவ சித்தாந்தப் பொருளைத் தமிழில் இனிது விளக்க வல்ல பெருநூல் இப் பேருரை ஒன்றே, பேருரைசெய்யப் புகுவார்க்குஎல்லாம் நல்லதோர் எடுத்துக்காட்டாய் இப் பெருநூல் விளங்குகின்றது. இப் பேருரையில் மாறுபட்ட கருத்துக்களை ஆராய்ந்து அறிந்து, திட்பமான கொள்கையைத் தேர்ந்தெடுத்துத் தெளிவாக விளங்குகின்றார்; மற்றவர் எளிதில் அறிந்து கொள்ள முடியாது நுட்பங்களைப் புலப்படுத்துகின்றார். சுருங்கிய சொற்களால் பொழிப்புத் திரட்டி நயங்கூறிச் செல்லுகின்றார். சிவஞான முனிவர் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் உண்ட பெருங் கொண்டல். அக் கொண்டல் பொழிந்த மழையின் தேக்கம் சிவஞான பாடியம். சிவஞான முனிவரது தத்துவ ஆராய்ச்சி நுட்பத்தை நோக்கும்போது, நீலகண்டரும் சங்கரரும் இராமானுஜரும் மத்துவரும் ஓர் உருக்கொண்டு சிவஞான முனிவராக வந்தனரோ என்றும், அவர் தம் உரைநடையை நோக்கும் போது நக்கீரரும் இளம்பூரணரும் பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் ஓர் உருக்கொண்டு அவராகப் போந்தனரோ என்றும் அறிஞர் கருதற்கு இடன் உண்டாகிறது.”* இப் பேருரை தமிழ்மொழி இலக்கணத்தில் ஆழ்ந்த புலமையும் தெளிவும் உடையவர்க்கே நன்கு விளங்கும். இந் நூலில் சுவாமிகளின் இலக்கணப் புலமை மாட்சியையும் ஆராய்ச்சித் திறனையும் காணலாம். திருக்குறள், பன்னிரு திருமுறை ஆகியவற்றின் கனிந்த பொருள் நலத்தை இதில் * திரு.வி.க. சிவஞானபாடியம் - அணிந்துரை (1936) |