பக்கம் எண் :

549ஆய்வு

காணலாம். தருக்கநூலின் பல முடிபுகள் இதில் இடம் பெறுகின்றன.
வடமொழியில்உள்ள வேத ஆகமப் பொருள்களின் திட்பமும் இதில்
வெளிப்படுகின்றது. தமிழிலும் வட மொழியிலும் உள்ள சைவ சித்தாந்த
நூல்களின் பொருள் தெளிவை இதில் கண்டு மகிழலாம். பல வேறு
சமயங்களில் உள்ள சாத்திரங்களின் பிழிவு இதில் உண்டு. பல நூறு சமய
நூல்களைக் கற்றுப்பெறும் அறிவை, இவ் வுரை ஒன்றினைக் கற்றே பெறலாம்.

     இதுவரை தமிழ்மொழியிலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ள
மாபாடியங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததொரு நூலாய் இப்பேருரை
விளங்குகின்றது. ஆதலின் சுவாமிகளை மாபாடியச் சிவஞான யோகிகள்
முனிவரைப் புகழ்கின்றார்:

     “மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தின் அகத்தைத் திறந்து
காட்டவல்ல திறவு கோல், சிவஞான முனிவர் உரையே என்று கூறலாம். இவ்
வுண்மை, மூலத்தையும் உரையையும் ஒருங்குவைத்து ஆராய்வோருக்கு நன்கு
புலனாகும். சிவஞான முனிவர், நுண்ணுடல் கொண்டு மெய்கண்டாருடன்
பேசிப் பேசி உரை வரைந்தனரோ என்று நினைக்குமாறு அவர்தம் உரை
அமைந்திருக்கிறது.

     “சிவஞான முனிவரை அறிவுப் பிண்டம் என்று கூறல் மிகையாகாது.
கலைகள் எல்லாம் சிவஞான முனிவராகத் தோன்றின போலும். தருக்கமும்
வியாகரணமும் இலக்கியமும இலக்கணமும், தமிழ்ச் சிவஞான முனிவருக்குப்
பணியாட்களாகித் துணைபுரியத் தவம் கிடந்தனவோ, என்னவோ
தெரியவில்லை”

     இந்த நூல் இனிய செந்தமிழில் ஆனது. இதிலுள்ள ஒவ்வொரு
சொற்றொடரிலும் சொல்லிலும் தமிழ்ச்சுவை பொங்கித் ததும்புகின்றது.
வடமொழிச் சொல்லும் சுலோகமும் மேற்கோளும் அம் மொழியில்
உள்ளவாறே எழுதப்பெறாமல் தமிழ்மரபுக்கும் ஒலிக்கும் ஏற்றவாறு
அமைக்கப்பெற்றுள்ளன. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்
என்று ஐந்து அவத்தைக்கும் தனித்தமிழ்ச் சொற்களை அமைத்துத் தந்த
பெருமை சிவஞான முனிவர்க்கே உரியதாகும். நனவு, கனவு, உறக்கம்,
பேருறக்கம், உயிர்ப்படங்குதல் என அவற்றைத் தமிழ்ச் சொற்களாக்கியுள்ளார்.