பக்கம் எண் :

உரையாசிரியர்கள்550

     சிவஞான முனிவர் மிக நயமாகவும் நுட்பமாகவும் உரை எழுதுபவர்
என்பதற்குச் சிறப்புப்பாயிரச் செய்யுள் உரையே சிறந்த சான்றாக உள்ளது.
அச் செய்யுளில்வரும் ‘மாயிருள்’ என்பதற்கு முனிவர் நுட்பமாகப் பொருள்
கூறியுள்ளார். இருளானது அக இருள், புற இருள் என இரு வகைப்படும்.
புற இருள் கதிரவனால் மாயும்; அக இருள் மாயாது. ஆதலின் புறஇருளைக்
கூறுங்கால் அதனை ‘மாயிருள்’ என்றார் என்றும், அக இருள்
சிவஞானபோதத்தால்  மாய்க்கப்படும் என்றும் குறிப்பாகக் கூறுகின்றார்.

     தமது கருத்தை இனிது விளக்கப் பல உவமைகளை எடுத்துக்
காட்டியுள்ளார்.

     “தன் நாடு பகைவரால் அழிவின்றி நிலைபெறுத்துதல் அரசன் தொழில்
ஆனாற்போல”

     “தண்ணீர்க் குடம் நிலைபெறுதல் அதனைத் தாங்கிச் செல்வோனது
முயற்சியின்றி அமையாதவாறுபோல” (பிராண-2)

     என்பனபோன்ற இனிய உவமைகளை உரை முழுவதும் காணலாம்.

     சிவஞான முனிவர் தம் இலக்கணப் புலமை தோன்ற உரை எழுதும்
இடத்திற்கு எடுத்துக்காட்டுகள் பல தரலாம்.

    அவையே தானும் ஆயிரு வினையின்
    போக்கு வரவு புரிய ஆணையின்
    நீக்கம் இன்றி நிற்கும் அன்றே
                                       (இரண்டாம் சூத்திரம்)

என்ற சூத்திரத்தின்கீழ், பின்வருமாறு இலக்கணக் குறிப்புத் தருகின்றார்:

     “ஆணையின் என்பது சிங்க நோக்காய், இருவினை என்பதனோடும்,
நீக்கம் இன்றி நிற்கும் என்பதனோடும் இயைந்து பொருள்தந்து நின்றது.
ஆண்டு இன் உருபு இருவினை என்பதனோடு இயையுங்கால் நீக்கப் பொருட்
கண்ணும் வந்தது. இன் என்பது சாரியை எனக்கொண்டு ஈரிடத்தும் ஏற்கும்
உருபுகள் விரித்து உரைத்தலும் ஒன்று. அன்றே-அசை. அநாதியே இவ்வாறு
நிற்கும் எனினும் அமையும்; ஆய்ப் புரிய நிற்கும் எனக் கூட்டுக.”

     சமயக் கருத்துக்களை விளக்கும் தொடர்மொழி, சொல் ஆகியவற்றிற்குச்
சிவஞான முனிவர் சிறந்த விளக்கம் தருகின்றார். சில சொற்களின் பொருள்
விளக்கம் பின்வருமாறு: