மூலமலம் காரிய வேறுபாட்டான் எழு வகைப்படும். அவையாவன: மோகம், மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் என்பனவாம். மதம்: தன்னால் எய்தப்படும் அரிவையைத் தானே கொண்டாடிப் புகழ்ந்து இவளின் மேற்பட்ட மகளிர் உலகத்து இல்லை என மதித்தற்கு ஏதுவாயது. அராகம்: அவள்பால் மேன்மேலும் ஆசை மிகுதற்கு ஏதுவாயது. கவலை: ஊழ்வலியால் அவளைத் தணந்தவழிக் கண்ணீர் விட்டு அழுது பெரிதும் துன்பமுற்றுக் கவலுதற்கு ஏது வாயது. தாபம்: அதனால் உள் வெதும்பித் தவித்தற்கு ஏது வாயது. வாட்டம்: அங்ஙனம் அலறியும் ஆற்றியும் உள்வெதும்புதலான் மூர்சையுற்று உள்ளமும் உடம்பும் வாடுதற்கு ஏதுவாயது. விசித்திரம்: தான் பெற்ற உலக வாழ்க்கையை நோக்குத்தோறும் இவர் எமக்கு உரிமைச் சுற்றத்தார்; இவள் உரிமையுடைய மனைவி; ஆடை, அணி, பொன் முதலிய செல்வங்களில் குறைவில்லை; மனை, கழனி முதலிய நிலங்களில் குறைவில்லை ஆகலான் எனக்கு இனிப் பெறக்கடவது என்னை எனவும், என் குடும்பத்தைப் புரப்பவர் யாவர் எனவும் இவ்வாறு பல வேறு வகைபடச் சிந்தை செய்தற்கு ஏதுவாயது. சிவஞான முனிவர் ஞானாமிர்தக் கோவையிலிருந்து பல எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கிச் செல்லுகின்றார். அக்கோவைக்குப் பழையவுரை ஒன்று உள்ளது. சிவஞான முனிவர் அவ்வுரையைச் சில இடங்களில் மறுத்துக் கூறுகின்றார். ஆதலின் அவ்வுரை முனிவர்க்கு முன்னரே வழக்கில் இருந்தது அறியப்படும். சிவஞான முனிவரின் புலமை முதிர்ச்சியை - ஆராய்ச்சித் திறத்தை - கல்விக் கடலின் ஆழத்தை- இப் பேருரையில் காணலாம். பல இலக்கண உரையும், மறுப்புரையும் எழுதிய பின்னரே இப் பேருரை இவரால் எழுதப்பட்டது. இவரே இப் பேருரையில் இலக்கணக்குறிப்புக்களை விளக்கும்போது, “சூத்திரவிருத்தியுள் உரைத்தாம். ஆண்டுக் காண்க” என்று குறிப்பிடுகின்றார். சிவஞான முனிவரின் ஆற்றலை-அறிவை-ஆராய்ச்சியைக் காலந்தோறும் உலக மக்களுக்கு எடுத்து விளக்கிப் பறைசாற்றும் இனிய நூலாய் இப் பேருரை விளங்கும். |