சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்க விரும்பும் திரு.வி.க பின்வருமாறு போற்றியுரைக்கின்றார்: “சிவஞான பாடியம் தத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு கருவூலம் போலத் துணைபுரியும்; தமிழ் பயில்வோர்க்கும் அவ்வாறே துணை செய்யும். சிவஞான பாடியம் தமிழ்ச் செல்வம்; கற்பகம்; காமதேனு. அது வேண்டுவதை உதவும். இத் துணைச் சிறப்பு வாய்ந்த திராவிடமாபாடியம் ஒவ்வொரு தமிழரிடத்திலும் மிளிர்தல் வேண்டுமன்றோ? தமிழ் வாழ்க. சிவநெறி வாழ்க. சிவஞான முனிவர் சேவடி வாழ்க.” பாரதியாருக்குக் கிடைத்த புதையல் ஏட்டுச்சுவடியில் இருந்த சிவஞான மாபாடியத்தை 1906-ஆம் ஆண்டில், மதுரை - விவேகபானு பதிப்பகம் வெளியிட்டது. அந்த அச்சு நூலுக்கு, புரட்சிக்கவிஞர் சி.சுப்பிரமணிய பாரதியார் ‘இந்தியா’ இதழில் (சென்னை-டிசம்பர்-22, 1906) கீழே உள்ளவாறு மதிப்புரை எழுதியுள்ளார்: “இப்புத்தகத்தை நாம் மிக ஆவலுடன் படித்தோம். மதுரை ‘விவேகபாநு’ ஆபீஸிலிருந்து நமக்கு அனுப்பப்பட்டது. தமிழிலே நல்ல பழக்கமுடைய எல்லோரும் நெடுங்காலமாக இது எப்போது வெளியாகுமோ என்று, யூத ஜாதியார் மேஸையாவின் வரவுக்குக் காத்திருப்பதுபோலக் காத்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பாஷையில் மிகுந்த பயிற்சியில்லாத நாம் கூட இளமை முதலாக, “ஐயோ, சிவஞான முனிவர் செய்திருப்பதாகச் சொல்லப்படும் ‘ஆதி திராவிட மஹாபாஷ்யம்’ என்ற அரிய நூலை, திருவாவடு துறை ஆதீனத்தார் உலகம் அறியாமல் மூடி வைத்திருக்கின்றார்களாமே? அது எத்தனை அருமையுடையதாய் இருக்குமோ எப்போதுதான் வெளிவருமோ?” என்று பலமுறை பெருமூச் செறித்திருக்கின்றோம். இப்போது, அருமையான நூலைக் குறைந்தவிலையில் அச்சிட்டனுப்பியதன் பொருட்டு விவேகபாநு ஆபீஸாருக்கு மிகவும் நன்றி செலுத்துகிறோம். இந்தநூல் நாம் எதிர்பார்த்திருந்ததற்குச் சிறிதேனும் பெருமையிலே குறைவுபடாது விளங்குகிறது. இன்னும் சில பகுதிகள், பிரசுரித்தோருக்குக் கிடையாமல் போய்விட்டமை பற்றி விசனமுறுகின்றோம். இந்நூலிலே விஷயங்கள் சைவசித்தாந்த மார்க்க சம்பந்தமானதால், அவற்றைப்பற்றிய பெருமையாக விவரிப்பது பொது ஐனங்களுக்கு ஒருவேளை விரஸமாய் இருக்குமென்று அஞ்சி, |