“ஐம்பெருங் காப்பியம், எண்பெருந் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு என்னும் இவ்விலக்கியங்களுக்ளும்” (387) என்று இவர் கூறுவதிலிருந்து, இப்பெயர்களும் பகுப்புகளும் பழைமையானவை என்று அறியலாம். கீழ்வரும் உரைப்பகுதி, நூல்களுக்குரிய பெயர்கள் எவ்வெக்காரணம் பற்றி வழங்கின என்பதை உணர்த்தும். “முதல் நூலாற் பெயர் பெற்றன ஆரியபடலம், பாரதம் முதலாயின. கருத்தானாற் பெயர்பெற்றன அகத்தியம், தொல்காப்பியம் முதலாயின. அளவினாற் பெயர் பெற்றன பன்னிரு படலம், நாலடி நானூறு முதலாயின. பகுதியாற் பெயர் பெற்றன களவியல் முதலாயின. செய்வித்தோனாற் பெயர் பெற்றன சாதவாகனம், இளந்திரையம் முதலாயின. தன்மையாற் பெயர் பெற்றன சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் முதலாயின. இடுகுறியாற் பெயர் பெற்றன. நிகண்டு நூல், கலைக்கோட்டுத்தண்டு முதலாயின.” எச்சங்களின் வகையும் முடிபும் உணர்த்துகின்ற சூத்திரத்திற்கு (329) உரையும் விளக்கமும் எழுதியபின், குறட்பாக்களுக்கு (308, 392, 341, 485, 342, 407, 281, 488, 10, 332, 475, 496) இவர் உரை எழுதி விளக்குகின்றார். இவர் கூறும் உரை பரிமேலழகர் போன்ற திருக்குறள் உரையாசிரியர் கருத்திற்கு மாறுபட்டுச் சில இடங்களில் உள்ளது. அவற்றை ஒப்பிட்டுக் கற்பது, இன்பந்தரும் செயலாகும். மயிலை நாதர் காலத்தில் ‘பாட்டியல்’ என்று தனி இலக்கணம் தோன்றவில்லை என்று கருதச் சான்று உண்டு. “எழுத்துச் சொற்பொருள் யாப்பணி என்பன, அச்சொல்லப்பட்ட பொருள்களை உணர்த்தின் இயற்பெயராம்” என்று இவர் ஐந்திலக்கணமே குறிப்பிடுகின்றார் (289). உரைதந்த ஒளி மயிலைநாதர் உரையினை இலக்கணப் புதையல் என்னலாம். இவ்வுரையால் பலப்பல புதிய செய்திகள் வெளிவந்தன. நன்னூல் ஐந்திலக்கணம் கூறும் ஐந்து அதிகாரங்களைக் கொண்ட பெருநூல் என்பது இவ் உரையால் தெரிந்தது. நன்னூலின் பொதுப்பாயிரம் பவணந்தியார் செய்தது என்று வழிவழியாக நம்பிவந்த கருத்து, வலிவிழந்தது இவ்வுரையால்தான். அவிநயம் என்னும் நூலைப்பற்றியும் அதன் உரையாசிரியரைப்பற்றியும் பல அரிய கருத்துகள் வெளிப்பட்டன. உரைநடையாக வழங்கிவரும் இலக்கணவாக்கியங்களுக்குரிய பழைய |