சூத்திரங்கள் சில தெரிந்தன. உரையாசிரியராகிய இளம்பூரணர் துறவி என்று தெரிந்தது. மறைந்து போன பல தமிழ் நூல்களின் பெயரும் அவற்றின் சில பகுதிகளும் வெளிப்பட்டன. நன்னூல் - ஐந்திலக்கண நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணமும் நன்னூல் கூறிற்று என்பதற்கு மயிலை நாதர் உரையில் சான்றுகள் உள்ளன. 1. சொல்லதிகாரத்தில், முச்சக நிழற்றும் (257) என்னும் வாழ்த்துச் சூத்திரத்தின் கீழ், “ஒரு நூலுக்கு எடுத்துக் கோடற் கண்ணே வணக்கம் சொல்லுதலன்றி அதிகாரந்தோறும் சொல்ல வேண்டியது யாதோ எனின், நூலொன்றே எனினும் அதிகாரங்கள் பொருளான் வேறுபடுதலானும் - சொன்னார் எனக் கொள்க” என்று மயிலைநாதர், நன்னூலில் பல அதிகாரங்கள் உள்ளன என்று உணரும் வகையில் எழுதுகின்றார். சொல்லதிகாரம் நன்னூலில் இறுதியதிகாரம் ஆயின், அதிகாரந்தோறும் என்றும் அதிகாரங்கள் என்றும் எழுதி இருக்கமாட்டார். 2. ‘பல்வகைத் தாதுவின்’ என்னும் சூத்திரவுரையின் கீழ் (267) இவர் பின் வருமாறு எழுதுகின்றார்: “சொல் எழுத்தாற் பெறப்படுதலின், எழுத்து, சொல், பொருள், அணி என்னும் நான்கினும் நடப்பது யாப்பு என்பதாயிற்று. ஆகவே, ஐந்ததிகாரங்களும் தம்முள் ஒன்றையொன்று இன்றியமையா எனக் கொள்க” 3. பொருள்கோள் பற்றிய சூத்திரங்களுக்கு உரை எழுதிய பின் முடிவில் (418) “பாட்டிற்குரிய பொருள்கோள்களை ஈண்டுச் சொல்ல வேண்டியது என்னையோ எனின், அஃதே! நன்கு சொன்னாய், மேல் ஒருமொழி, தொடர் மொழி, பொதுமொழி என்று சொற்கூறு செய்து அவையாமாறு சொன்னாரன்றே; அவற்றுள், தொடர்மொழி அடிமறிமாற்று ஒழித்த ஏனை ஏழ் பொருள்கோளும்படத் தொடர்வன உளவாகலின், ஈண்டு வைத்தார் என்க. அஃதேல் பெரும்பாலும் யாப்பிற்கே உரிமையுடைமையின் ஆண்டே வைக்கற்பால எனின், முன்னம் சொல்லறிந்து யாப்பறிய வேண்டுதலிற் சொல் அறிவுழி வைக்கவேண்டும் என்க.” என்று யாப்பு இலக்கணம் பின்னால் இருந்ததை நினைவூட்டுகின்றார். 4. சொல்லதிகாரத்தின் இறுதியில் உள்ள ‘பழையன கழிதலும்’ என்னும் புறநடைச் சூத்திரத்தின்கீழ், இந் நூலிற் சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்க நோக்காய் நிற்பதொரு |