“ஆசிரியர் தொல்காப்பியனார் (இவ்வாறு) குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோ எனின், நுந்தை யுகரங் குறுகி மொழிமுதற்கண் வந்த தெனின்உயிர்மெய் யாமனைத்தும்-சந்திக் குயிர்முதலா வந்தணையும் மெய்ப்புணர்ச்சி இன்றி மயலணையும் என்றதனை மாற்று. இவற்றை விரித்துரைத்து, விதியும் விலக்கும் அறிந்து கொள்க” (105). நாகரிகமும் பழக்க வழக்கங்களும் மயிலைநாதர் உரையில், அக்கால மக்களின் நாகரிகமும் பழக்க வழக்கமும் இடம்பெற்றுள்ளன. “ஒருவரான் அரிய தவம் பெற்றேன் என்றக்கால், ஆண்பால் என்பதும், ஒருவரால் அரிய மடல் பெற்றேன் என்றக்காற் பெண்பால் என்பதும் குறிப்பான் விளங்கும். அறிவும் தவமும் பெண்பாலால் பெறல் அரியவோ எனின், நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே (264) எனச் சான்றோர் சொல்லுப ஆகலான் அரிய என்க” என்று மயிலைநாதர் கூறும் கருத்து, அவர் காலத்தில் பெண்களுக்கு இருந்த நிலையைப் புலப்படுத்தும். படைத்தலைவன் மனைவியைப் படைத்தலைவி என்றும், சேனாவரையன் மனைவியைச் சேனாவரசி என்றும் அக்காலத்தவர் வழங்கினர் (276). தஞ்சாவூர், இவர் காலத்தில் சிறப்புடன் விளங்கியது. அதனைத் தஞ்சை என்று வழங்கினர் (238). ‘கார்த்திகை விளக்கு விழா’ இவர் காலத்தில், கொண்டாடப்பட்டது (400). செல்வர்கள் பல நூல்களைத் தொகுத்து ஓரிடத்தில் வைத்திருந்தனர் என்றும், அவற்றை எடுத்துத் தரவும் வைக்கவும் ஏவலாளரைப் பயன்படுத்தினர் எனவும் பின்வரும் உரைப்பகுதி உணர்த்துகின்றது: “பல பொத்தகம் கிடந்துழி, ஒருவன் ஏவுவான் ஏவலாளனை, பொத்தகங்கொடுவா என்றால், அவன் ஒரு பொத்தகம் கொடு வந்த விடத்து, தான் கருதியது அன்றெனின் அவன் ‘மற்றையது கொணா’ என்னும்” (432). |