பக்கம் எண் :

565ஆய்வு

     வடநாடு சென்று கங்கை நீராடி வந்த துறவியர், “கங்கையாடிப்
போந்தேன்; ஒரு பிடி சோறு தம்மின்; ஓராடை தம்மின்” என்று
இல்லந்தோறும் சென்று கேட்டுப் பெற்றனர் (385).

ஆடைபற்றிக் கூறும் குறிப்புக்கள்

    “குழிப்பாடி, சீனம் என்பன அவ்விடம் உணர்த்தின் இயற்பெயராம்;
இப்படாம் குழிப்பாடி, இப்பட்டுச் சீனம் என அவ்விடத்திற் பொருளை
உணர்த்தின் ஆகுபெயராம்” (289).

     “கோலிகன், சாலிகன், பட்டணவன், சேணிகன் என்பன, அச் சாதிகளை
உணர்த்தின் இயற்பெயராம்; இவ்வாடை கோலிகன், இவ்வாடை சாலிகன்,
இவ்வாடை பட்டணவன் இவ்வாடை சேணிகன் என, அவ் அவரான்
ஆக்கப்பட்ட ஆடைகளை உணர்த்தின் ஆகுபெயராம்” (288).

     “நூறு விற்கும் பட்டாடை உளவோ என்றாற்கு ஐம்பதுவிற்கும்
கோசிகம் அல்லது இல்லை, இத்துணைப் பட்டாடை யுள என்க” (405).

     இக் குறிப்புகளிலிருந்து ஆடைகளின் வகை, அவை நெய்த இடம்,
அவற்றை நெய்த சாதியினர், விலை ஆகியவற்றை உணரலாம்.

3. சங்கர நமச்சிவாயர்

     நன்னூலுக்கு, மயிலைநாதருக்குப்பின் உரைஎழுதிப் பெரும்புகழ்
பெற்றவர், சங்கர நமச்சிவாயர். இவர் பதினோழாம் நூற்றாண்டில்
திருநெல்வேலியில் தடிவீரையன் கோயில் தெருவில் வாழ்ந்தவர்; சைவ
வேளாளர் குடியில் தோன்றியவர். அக்காலத்தில் இவரைச் சங்கர நமச்சிவாய
பிள்ளை என்றும், சங்கர நமச்சிவாயப் புலவர் என்றும் வழங்கி வந்தனர்.

     இவரது ஆசிரியர், நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்
கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர். தொல்காப்பியம் முதலிய
இலக்கணங்களையும், சங்க இலக்கியம், வடமொழி நூல்கள் ஆகியவற்றையும்
நன்கு பயின்றார் இவர். சைவ சித்தாந்தங்களையும் திருமுறைகளையும்
வைணவ இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரைச் சிறப்புப் பாயிரம்,
“பன்னூற் செந்தமிழ்ப் புலவன்” என்று பாராட்டுகின்றது. சங்கர நமச்சிவாயர்
தம் ஆசிரியராகிய சாமிநாத தேசிகரை,