‘நடவாமடிசீ’ என்ற நூற்பா (137) நன்னூலாரின் இலக்கணப் புலமையை உணர்த்தவல்ல சிறந்த நூற்பா என்பதை அறிந்த சங்கர நமச்சிவாயர் ‘கையறியா மாக்கட்கு அன்றி நூலியற்றும் அறவினையுடைய மக்கட்குப் பல்கலைக்குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் புகழ்போல் விளங்கி நிற்றலான், உலக மலையாமை பத்தழகோடும் பிறந்து நின்றது இ்ச் சூத்திரம் என்று உணர்க” என்று வியந்து போற்றுகின்றார். ‘பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல்’ என்ற சூத்திரத்தில் (268) உள்ள உவமையை, “தோல் இரத்தம் இறைச்சி மேதை எலும்பு மச்சை சுவேதநீர் என்னும் எழுவகைத் தாதுக்காளினால் உயிர்க்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போல” என்று விளக்கிப் பொருள் உரைக்கின்றார். எச்சங்களை விளக்கும் சூத்திரவுரையில் (360) சில குறள்களுக்கு நல்ல விளக்கம் கூறுகின்றார். ‘இணர் எரி தோய்வன்ன’ (குறள்-308) என்ற குறளின் விளக்கம் படித்து மகிழத்தக்கது. உரியியலில் ‘இன்னாது இன்னுழி’ (நன்-460) என்ற சூத்திரவுரையின் கீழ், ’இவ்வியலில் சால என்பது முதல் ஆர்ப்பு என்பது ஈறாக நாற்பத்து ஐந்து உரிச்சொல் எடுத்துச் சுருங்கச் சொல்லுதல்’ என்று உரிச்சொற்களைக் கணக்கிட்டு உரைக்கின்றார். பொருள் கோள்களின் பெயர்ப் பொருத்தங்களைச் சங்கர நமச்சிவாயர் நன்கு விளக்குகின்றார். அவை பின்வருமாறு: தாப்பிசை: ஊசல்போல் இடைநின்று இருமருங்கும் செல்லும் சொல். தாம்பு என்பது ஊசல். அளைமறிபாப்பு: அளை மறிபாம்பு என்பதில் பாம்பு என்பது பாப்பு என நின்றது.* மொழி மாற்று: தனக்கு உள்ளதைக் கொடுத்துப் பிறர்க்கு உள்ளதை வாங்கும் பண்டமாற்றுப் போறல். வடமொழிப் புலமை சங்கர நமச்சிவாயர் தம் வடமொழிப் புலமையை வெளிப்படுத்தும் இடங்கள் சிலவற்றைக் கீழே காண்போம்: * வளைக்குள் நுழைகின்ற நல்ல பாம்பு, தலையை முன்னால் வைத்து உடலைச் சுருட்டி அதன்மேல் தலையை வைக்கும். |