“வட நூலார் இடுகுறியை ரூடி என்னும், காரணத்தை யோகம் என்றும், காரண இடுகுறியை யோக ரூடி என்றும் வழங்குப” (62). “பிரகிருதி விகிருதி என்னும் ஆரிய மொழிகள் பகுதி விகுதி எனத் திரிந்து நின்றன (133). “வடநூலார் சொற்பொருளை வாச்சியம் வெங்கியம் இலக்கணை என மூன்று எனவும், இலக்கணையை வெங்கியத்துள் அடக்கி இரண்டு எனவும் கூறுப. இவற்றுள் வாச்சியம் என்பது வெளிப்படை; வெங்கியம் என்பது குறிப்பு; இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருட்குத் தந்து உரைப்பது; அது விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை என மூவகைப்படும் (269). உவமைகள் இவர் பல இனிய உவமைகளை எடுத்துக்காட்டி, இலக்கணக் கருத்துக்களை இனிது விளக்குகின்றார். அவ்வுவமைகள் எளியவையாயும், சிறியவையாயும் இருப்பினும் கற்போர் உள்ளத்தில் நன்கு பதியவல்லவை. தொகை வகை விரி என்பவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதற்கு “மரத்தினது பராரையினின்றும் கவடு கோடு கொம்பு வளார் பலவாய் ஒன்றோடொன்று தொடர் பட்டு எழுந்து நிற்றல்போல் என்ற உவமையைக் கூறுகின்றார் (பாயிரம்). மேலும், மரங்களைப்பற்றிய பின்வரும் உவமைகளைக் கூறுகின்றார்: மா பலா முதலியன பராரை முதலிய சினையொடு நின்றன எனக் கண்டது கூறுவார்போல (141). கமுகந் தோட்டம் என்றாற்போல (151). இவைகளேயன்றி முதல் நூல் வழி நூல் சார்பு நூல் என்பவற்றிற்குத் தந்தை மகன் மருமான் என்பவர்களை உவமை கூறுகின்றார். ஙகரம் சுட்டு வினா எழுத்துகளை முதலில் பெற்று வருவதற்கு முடவன் கோலூன்றி வருவதை உவமை கூறுகின்றார். இத்தகைய சிறந்த உவமைகள் உரை முழுதும் உள்ளன. போற்றும் நூல்கள் சங்கர நமச்சிவாயர் தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகிய மூன்று நூல்களையும் பெரிதும் போற்றுகின்றார். தொல்காப்பியர் கொள்கையிலிருந்து நன்னூலார் |