பக்கம் எண் :

569ஆய்வு

மாறுபடும் இடங்களைத் தெளிவாகச் சுட்டுகின்றார். இடையிடையே தம்
உரையில் பல தொல்காப்பியச் சூத்திரங்களை மேற்கோள் தருகின்றார்.
தொல்காப்பியவுரைகளை ஆழ்ந்து பயின்று, பொருந்தாவுரைகளை
மறுக்கின்றார்.

     திருக்குறளிலிருந்து பல மேற்கோள்கள் இவர் தருகின்றார். ‘பல்வகைத்
தாதுவின்’ என்ற சூத்திரத்திற்கு மேற்கோளாக, ‘வரும் குன்றம் அனையான்’
என்ற திருக்கோவையார் பாடலை எடுத்துக்காட்டுகின்றார்.

     இவர் இம்மூன்று நூல்களையும் போற்றிக் கற்றவர் என்பது
தெளிவாகின்றது.

4. ஆண்டிப் புலவர் 

     ஆண்டிப் புலவர்  நன்னூலுக்கு விருத்தப்பாவினால் உரை இயற்றியவர்.
இவர் இயற்றிய உரை, ‘உரையறி நன்னூல்’ என்று பெயர் பெற்றிருந்தது.
இவர் ஆசிரிய நிகண்டும் இயற்றினார். அந்நூலின் பாயிரம், “இயம்பிய
நிகண்டின் உரையறி நன்னூலினோடு இரண்டுமே செய்து வைத்தான்” என்று
உரைக்கின்றது.

     ‘உரையறி நன்னூல்’ இன்று கிடைக்கவில்லை.

     இவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். தொண்டை
மண்டலத்தில் செஞ்சிக்கு அருகேயுள்ள ஊற்றங்கால் என்பது இவரது
பிறப்பிடமும் இருப்பிடமுமாகும். இவரது தந்தையாராகிய பாவாடை வாத்தியர்
சிறந்த தமிழறிஞராக விளக்கினார். தந்தையாரிடம் கல்வி பயின்ற ஆண்டிப்
புலவர், கல்வயிற் சிறந்து பலர்க்கு ஆசிரியராய்த் திகழ்ந்தார். ஆசிரிய
விருத்தம் விரைந்து பாடவல்ல இவர், தம் மாணவர் நன்னூலை உரையுடன்
கற்றுத் தெளிய ஆசிரிய விருத்தப்பாவால் உரை இயற்றினார்.

     ‘செம்மை சிறுமை’ என்ற நன்னூல் சூத்திரத்தின் விளக்கமாய்ப்
பின்வரும் ஆசிரிய விருத்தம் அமைந்துள்ளது:

    செம்மையும் கருமையும் பசுமையும் வெண்மையும்
         திண்மையும் நுண்மை யுடனே
    சிறுமையும் பெருமையும் குறுமையும் நெடுமையும்
         தீமையும் தூய்மையும் அலால்
    வெம்மையும் குளிர்மையும் கொடுமையும் கடுமையும்
         மேன்மையும் கீழ்மை யும்பின்
    மெய்ம்மையும் வறுமையும் பொய்ம்மையும் வன்மையும்
         மென்மையும் நன்மை யும்சொல்