பக்கம் எண் :

உரையாசிரியர்கள்572

பின் காலஞ் சென்றவர்: ஒரு பேரறிஞர்; அவர் பிறர் கண்டு அழுக்காறு
அடையத்தக்க வீறுமிக்க வைணவர்”1

    இவர், பள்ளிச் சிறுவர்கள் பயில்வதற்கு ஏற்ற வகையில் ஆத்திசூடி,
கொன்றை வேந்தன். வெற்றி வேற்கை ஆகியவற்றிற்கு உரை இயற்றினார்.

     நன்னூலுக்குக் காண்டிகையுரை எழுதினார். திருக்குறள் அறத்துப்பாலில்
இல்லறவியல்வரை உரை இயற்றினார்; பரிமேலழகர் உரைக்கு விளக்கவுரை
இயற்றி, சில இடங்களில் ‘வேறுரை’ என்று குறிப்பிட்டுத் தம் கருத்தை எழுதி
வெளியிட்டார்.

     குடாரம் என்னும் கண்டன நூல் ஒன்றும் இயற்றினார். அந் நூலின்
முன்னுரையில் அதன் தலைப்பிற்குப் பின் வருமாறு விளக்கம் தந்துள்ளார்:

      குடாரம்: இது திருவள்ளுவர் குறளையும் பரிமேலழகர்
உரையையும்பற்றிச் சிலர் மயங்கிக்கூறிய வழுஉக் களை குடாரம்.

நன்னூல் உரை

    இவர் இயற்றியுள்ள நன்னூல் உரை பெரும்பாலும் சிவஞான முனிவர்
உரையைத் தழுவிச் செல்லுகின்றது. எளிமையும் தெளிவும் வாய்ந்த நடையில்,
நினைவில் நிற்கத் தகுந்த எளிய உதாரணங்களுடன் அமைந்துள்ளது.

இவர் தம் உரையில்,

    தொல்லை வடிவின எல்லாஎழுத்தும் ஆண்டு
    எய்தும் எகரம் ஒகரம் மெய் புள்ளி
                                       (நன்-எழுத்-43)

என்ற நன்னூல் சூத்திரத்தை,

    தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு்
    எய்தும் ஏகாரம் ஓகாரம் மெய்புள்ளி

என்று மாற்றிவிட்டார். மாற்றியதற்குக் காரணம் கூறுகையில், “இச்
சூத்திரத்தை ஏகாரம் ஓகாரகம் மெய் புள்ளி பெறும் எனத் திருப்ப
வேண்டிற்று என் எனின், இக் காலத்தார் ஏகார ஓகாரங்களுக்கு புள்ளியிட்டு
எழுதுவது பெருவழக்கு ஆயினமையால் என்க” என்று எழுதுகின்றார்.


    1. “My first teacher of Tamil was a most learned scholar, long dead (Peace to his ashes!), who possessed more than any man I have known. the cleverness ingenium perfervidum. He was a profound and zealous Vaishnavite”