பக்கம் எண் :

573ஆய்வு

7. விசாகப்பெருமாள் ஐயர்

விசாகப்பெருமாள் ஐயர் திருத்தணிகையில் பிறந்தவர்; வீர சைவராகிய
கந்தப்பையரின் புதல்வர்; இராமாநுசக் கவிராயரின் மாணவர், சரவணப்
பெருமாளையரும் இவரும் இரட்டைப் பிறவிகளாகப் பிறந்தவர்கள். இவர்
வாழ்ந்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

     இவர் நன்னூலுக்குக் காண்டிகையுரை ஒன்றைத் தம் காலத்து
மாணவர்கள் எளிதில் இலக்கணம் கற்றுத் தெளியும் வகையில் இயற்றினார்.
இவரது நன்னூல் உரைப் பாயிரத்தில் சேயூர் முத்தைய முதலியார்,

    தத்துவம் உணர்திருத் தணிகை மடாதிபன்
    சத்தெனும் வீர சைவமா கேசன்
    கற்றுணர்ந் தோங்கிய கந்தப்ப தேசிகன்
    பெற்றருள் விசாகப் பெருமா ளையன்

என்று இவரைக் குறிப்பிடுகின்றார்.

     இவர் நன்னூலுக்கு உரை இயற்றிய சிறப்பை,

    நயன்மிகு சங்கர நமச்சி வாயனால்
    பயன்மிகச் செய்திடப் பட்டதன்  பின்னர்,
    தவஞா னந்தனிற் சால்புகூர் துறைசைச்
    சிவஞான முனிவனால் திருத்திடப் பட்ட
    விருத்தி யுரைதனை வெளிப்படச் சுருக்கி,
    கருத்துப் பதப்பொருள் காட்டு மற்றும்சில
    வறுமுறை காண்டிகை உரையுளங் கொண்டு
    சிறுவரும் உணர்தரும் செவ்வியற் செய்தனன்

என்று பாயிரம் உரைக்கின்றது.

     விசாகப்பெருமாள் ஐயர் எளியவுரை எழுதி மாணவர் உலகிற்கு
நன்மை செய்த பின்னரே, இவரைப் பின் பற்றிப் பலர் நன்னூலுக்கு உரை
எழுதும் முயற்சியில் ஈடுபட்டனர்.

8. ஆறுமுக நாவலர்

    ஆறுமுக நாவலர் நன்னூலுக்குக் காண்டிகை யுரை எழுதி வெளியிட்டார்.
இவ்வுரை தமிழ் கற்கும் இளைஞர்க்கு நாவலர் தந்த நல்ல பரிசாகும்.
இவ்வுரை இளைஞர் உலகில் என்றும் நிலைத்து வாழும்.