பக்கம் எண் :

உரையாசிரியர்கள்574

     நாவலர் பல ஆண்டுகள் தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு
மாணவர் உள்ளத்தை அறிந்து சிறந்த முறையில் உரை இயற்றியுள்ளார்.
ஒவ்வொரு சூத்திரத்தின் கீழேயும் ‘பரிட்சை வினாக்கள்’ இடம் பெற்றுள்ளன.
ஆகுபெயர், அன்மொழித்தொகை வேறுபாடுகளை மிகத்தெளிவாக இனிய
முறையில் சிறுசிறு வாக்கியங்களில் விளக்குகின்றார் நாவலர்.

     நூலின் இறுதியில் பிற்சேர்க்கையாக அப்பியாசம் என்னும் தலைப்பில்
பல பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அறுபது பகுதிகளில் பலவேறு
பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. இலக்கண அமைதி என்ற பகுதியில்
சொல்லுக்கும் வாக்கியங்களுக்கும் இலக்கணம் கூறும் முறை
விளக்கப்பட்டுள்ளது. பல சொற்களுக்குப் பகுபத இலக்கணம்
காட்டப்பட்டுள்ளது. சொல்லிலக்கண சூசி என்ற தலைப்பில் சொற்களின்
வகைகளை விரிக்கின்றார். தொடர் இலக்கணம் கூறிப் பல வாக்கியங்களைத்
தெளிவு படுத்துகின்றார்.

9. சடகோப ராமாநுசாச்சாரியார்

     நன்னூலுக்கு எளிய முறையில் உரை எழுதி மாணவர் உலகில்
செல்வாக்குப் பெற்றவர் இவர். தமிழ் மொழியின் மாறுதலையும்
வளர்ச்சியையும் உணர்ந்து தக்க உதாரணமும் மேற்கோற்கோளும் காட்டி
இவரது உரை செல்லுகின்றது. எளிமையும் தெளிவும் இவரது உரையின்
சிறப்பியல்புகளாகும்.

     இவர் 1871ஆம் ஆண்டு, திருவல்லிக்கேணியில் (சென்னை)
அப்பனையங்காருக்கு மகனாகத் தோன்றினார். பல வேறு தமிழ்ப் பணி
புரிந்த இவர் 1910-இல் மறைந்தார்.

     நன்னூலுக்குக் குமாரசாமிப் புலவர், பவானந்தம் பிள்ளை, ஆ.
முத்துத்தம்பிப் பிள்ளை ஆகியோரும் உரை இயற்றியுள்ளனர். இவர்கள்
இயற்றியுள்ள உரைகள் யாவும் மாணவர்க்கு இலக்கணங் கற்பிக்கும்
நோக்கத்துடன்  எழுதப்பட்டவையாகும்.

     தமிழக அரசியலார் ஓலைச் சுவடி நூல் நிலைய வெளியீடாக
இயற்றியவர் பெயர் தெரியாத நல்னூல் காண்டிகை உரை ஒன்று
வெளிவந்துள்ளது (1952). இவ்வுரை மிக எளிமையாக, பழைய உரைகளைத்
தழுவிச் செல்லுகின்றது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் 13 சூத்திரம்
வரையிலுமே உரை உள்ளது.