11 இலக்கிய உரையாசிரியர்கள் - II 1. திருக்கோவையார் - பழையவுரை திருக்கோவையாரின், பேராசிரியர் உரைக்கு முற்பட்ட உரை ஒன்று உள்ளது. அவ்வுரை இயற்றிவர் பெயர் தெரியவில்லை. அவ்வுரைக்குப் பழையவுரை என்று பெயரிட்டு, தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையத்தார் வெளியிட்டுள்ளார் (1951). திருக்கோவையாருக்குப் பேராசிரியர் உரை எழுத இவ்வுரை பெரிதும் பயன்பட்டுள்ளது. இப் பழையவுரையை அவர் ‘வேறுரை’ என்று ஆங்காங்கே குறிப்பிடுகின்றார். பழையவுரை கொண்ட பாடங்களைத் தருகின்றார். பேராசிரியர் உரையில், பாடலுக்குப்பின் கொளு உள்ளது; பழையவுரையில் பாடலுக்கு முன் கொளு அமைந்துள்ளது. இவ்வுரையில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. நிமிடம் என்ற சொல் இவ்வுரையில் இடம் பெற்றுள்ளது. தாழேன் (269) என்பதற்கு, “நிமிடம் அளவும் தாழ்ந்து அங்கே உயிர் கொண்டு இரேன்” என்று பொருள் கூறுகின்றார். இறைவன் என்ற சொல்லுக்கு முதலியார் (6, 29, 44, 80, 82, 121) என்று பொருள் கூறுகின்றார். சில சொற்களுக்கு இவ்வுரை தரும் பொருள் போற்றத்தக்கவை. அவற்றுள் சிலவற்றைக் காண்போம். தென்புலியூர் - (19) தெற்குத் திருப்பதியாக உள்ள பெரும்பற்றப்புலியூர். சேய் - (370) சுப்பிரமணியன். சுழியல் - (377) திருவலஞ்சுழி. சிந்தாமணி (12,400) சிந்தாமணி என்கின்ற வள்ளல். |