பாடலின் பொருள் நன்கு விளங்கும்பொருட்டு, சில சொற்களை வருவித்து இவ்வுரையாசிரியர் பொருள் எழுதுகின்றார். மீண்டார் எனஉவந் தேன்கண்டு நும்மைஇம் மேதகவே பூண்டார் இருவர்முன் போயினரே புலியூ ரெனைநின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக்கண் டேனயலே தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே (244) என்ற பாடல், மூவர் சேர்ந்து உரையாடுவதை உணர்த்துகின்றது. பாட்டில் மூவர் பெயரும் பேச்சும் எளிதில் விளங்கும் வகையில் அமையவில்லை. பழையவுரை இப்பாடலின் பொருளை நன்கு விளக்கி, சில சொற்களை வருவித்து விளக்குகின்றது. ‘உங்களைக் கண்டு, எம்மகளும் அவளுடை நாயகனும் மீண்டார்கள்’ என்று பிரியப்பட்டிருந்தேன்; இம்மெய்ப்பாடு தக்க ஒழுக்கத்தினைப் பூண்டவர்கள் இரண்டு பேர் முன்னே போனார்களோ? என்று செவிலி கேட்ப, எதிரே வருகிற நாயகன் சொல்லுவான்; ‘புலியூரில் நின்று என்னை அடிமை கொண்டவன்; அவனுடைய அரியமலையில் சிங்கம் போன்றவனைக் கண்டேன். அவனுக்கு அயலாக ‘தூண்டப்படாத விளக்கினை ஒப்பாய்! அன்னை சொன்ன வடிவு எத்தன்மைத்து?” 2. திருக்கோவையார் பேராசிரியர் உரை ‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானூறு’ பாடல்களுக்கும் பேராசிரியர் உரை இயற்றியுள்ளார். திருக்கோவையைச் சிறந்தோர் இலக்கியமாகப் பரப்பிய பெருமை பேராசிரியர்க்கு உண்டு. அந்நூல் பலவேறு நோக்கத்துடன், பல ஆண்டுகளாகக் கற்கப்பட்டு வருகின்றது. ஆரணம் காண்என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணம் காண்என்பர் காமுகர் காமநன் னூல்அதுஎன்பர் ஏரணம் காண்என்பர் எண்ணர் எழுத்துஎன்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே என்ற பாடல் இங்கே நினைக்கத்தக்கதாகும். |