திருகோவையாருக்கு உரை எழுதியர் யார் என்பது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. தொல்காப்பியத்திற்கு உரை இயற்றிய பேராசிரியரே திருக்கோவையாருக்கும் உரை இயற்றினார் என்பது டாக்டர் மு. வ. அவர்களின் கருத்தாகும் (கலைக் களஞ்சியம் தொகுதி 5 பக்கம் 485). இரு பெரும் நூல்களுக்கும் உரை இயற்றியவர்கள் வேறு வேறானவர்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். திருக்கோவையாரை உரையுடன் பதிப்பித்த ஆறுமுக நாவலர் அதன் உரையாசிரியரை நச்சினார்க்கினியர் என்று குறிப்பிட்டார். தஞ்சைவாணன் கோவைக்கு உரை எழுதிய சொக்கப்ப நாவலர் திருக்கோவையாரின் உரையாசிரியர் சேனாவரையர் என்று குறிப்பிட்டுள்ளார். பிரயோக விவேக நூலாசிரியரான சுப்பிரமணிய தீட்சதரும், பரிமேலழகர் நுண்பொருள்மாலை இயற்றிய இரத்தின கவிராயரும் திருக்கோவையாரின் உரையாசிரியர் பேராசிரியரே என்று கூறுகின்றனர். ‘திருக்கோவையாரின் உரையாசிரியர், பேராசிரியரே’ என்ற கொள்கையே அறிஞர்களிடம் நிலவி வருகின்றது. காலம் இவர் பரிமேலழகருக்கு முற்பட்டவராய் இருக்கலாம். பல இடங்களில் பேராசிரியர் உரையின் சாயல் பரிமேலழகர் உரையில் தெரிகின்றது. வித்தம் என்ற சொல்லுக்குச் சதுரப்பாடு என்று பேராசிரியர் பொருள் கூறியுள்ளார் (109). இப்பொருளையே பரிமேலழகரும் ‘நத்தம்போல்’ என்ற குறளின் உரையில் (235) மேற்கொண்டுள்ளார். மேற்கோள் சூத்திரங்கள் திருக்கோவையார் உரையில் பேராசிரியர் அகப்பொருள் துறைகளை விளக்கக் கொளுக்களை அமைத்துத் தருகின்றார். பல பெரிய அகப்பொருள் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகின்றார். இவற்றை எல்லாம் ஒன்று சேர்ந்து அகப்பொருளை விளக்கும் இலக்கணநூல் ஒன்றை உருவாக்கலாம். அக்கொளுக்கள், எதுகை மோனை நயம் வாய்ந்து ஓசை இன்பத்தோடு அமைந்துள்ளன. விற்செறி நுதலியை இற்செறி வித்தது (133) முளையெயிற் றரிவை விளைவிலள் என்றது (104) |